புதுடெல்லி: போர் விமான பைலட் இருக்கை வெளியேற்றும் சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
விமானப்படை பயன்பாட்டுக்காக இலகு ரக போர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பொருத்தப்படும் பைலட் இருக்கை, ஆபத்தான நேரங்களில் பைலட் தப்பிக்க உதவுகிறது.
இதற்காக இந்த சீட்டின் அடியில் ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்ட இன்ஜின் இருக்கும். அவசர காலத்தில் இதன் சுவிட்சை பைலட் ஆன் செய்தால், அவர் விமானத்தை விட்டு பல அடி உயரம் இருக்கையுடன் தூக்கி வீசப்படுவார். பின் பாராசூட் உதவியுடன் அவர் தரையிறங்குவார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ராக்கெட் இன்ஜின், போர் விமானத்தின் முன் பகுதி அமைப்புடன் பொருத்தப்பட்டு, அது சிறப்பு தண்டவாளத்தில் அதிவேகத்தில் செல்லும்போது பைலட் இருக்கை வெளியேறும் சோதனை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக சண்டிகரில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. மணிக்கு 800 கி.மீ வேகத்தில், ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானத்தின் முன்பகுதி தண்டவாளத்தில் செல்லும் போது பைலட் இருக்கை வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது.
ஏரோ நாடிக்கல் மேம்பாட்டு முகமை மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனையை நடத்தியது. இதை இந்திய விமானப்படை மற்றும் ஏரோஸ்பேஸ் மெடிசன் இன்ஸ்டிடியூட் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுபோன்ற சோதனையை வளர்ச்சியடைந்த ஒரு சில நாடுகள் மட்டுமே மேற்கொள்கின்றன. அந்தப் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.