இந்தியா

“கடந்த காலங்களில் இந்தியா வல்லரசாக அல்ல... விஸ்வ குருவாகவே இருந்தது” - மோகன் பாகவத்

மோகன் கணபதி

டொராண்டோ (கனடா): கடந்த காலங்களில் இந்தியா வல்லரசாக அல்ல; விஸ்வ குருவாகவே இருந்தது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் இந்துக்களின் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பாகவத், “இந்தியா எப்போதெல்லாம் பெரிய சக்தியாகத் திகழ்ந்ததோ அப்போதெல்லாம் அது ஒரு வல்லரசாக மாறவில்லை. மாறாக, அது ஓர் உன்னத நாடாகவே திகழ்ந்தது. அது உலகுக்குச் சேவை செய்தது. தனது பண்பின் காரணமாக அது விஸ்வ குருவாக மாறியதே தவிர, வல்லரசாக அல்ல.

அறிவைப் பகிர்ந்து கொள்வதே இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியம். மெக்சிகோ முதல் சைபீரியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளில் இந்தியர்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எந்த நாட்டையும் கைப்பற்றவில்லை. யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், அறிவு, கணிதம், ஆயுர்வேதம், நாகரிக விழுமியங்களை வழங்கினார்கள்.

சேவை மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் இந்த பாரம்பரியம் பன்முகத்தன்மைக்கு அப்பால் உள்ள ஒற்றுமையை உணர்வதில் வேரூன்றியுள்ளது. உயிரற்றவை மற்றும் உயிருள்ளவை என அனைத்தும் நம்முடையவை. அதுவே ஓர் இந்துவின் உணர்வு. பன்முகத்தன்மைக்கு அப்பால் உள்ள ஒற்றுமையைக் காண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகின் எந்தவொரு பகுதியில் நெருக்கடி காரணமாக உதவி கோரப்பட்டதோ அப்போதெல்லாம் இந்தியா உதவியது. உதவி கேட்கப்படாதபோதும்கூட அது உதவியது. இதுவே இந்தியாவின் டிஎன்ஏ. பன்முகத் தன்மையுடன் ஒற்றுமை இணைந்து இருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதே இந்தியாவின் விதி.

உலகமே ஒரு குடும்பம் என்பது இந்தியாவின் பண்டைய புரிதல். அனைவரையும் உரிமையாளர்களாகவோ உடமையாளர்களாகவோ பார்க்காமல் சகோதரர்களாகப் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது இது. இது என்னுடையது, அது அவனுடையது என்று நினைப்பது குறுகிய மனப்பான்மை. பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் உலகமே ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டை நம்புகிறார்கள்.

பல்வேறு சாதிகள், நம்பிக்கைகள், மொழிகள், மதங்கள் கொண்ட இந்தியா எப்போதும் பன்முகத்தன்மை வாய்ந்ததாகவே இருந்து வருகிறது. ஏனெனில், பன்முகத்தன்மை என்பது இயல்பானது என்பதையும், ஒற்றுமை என்பது யதார்த்தம் என்பதையும் நாம் அறிவோம்.

இந்து என்பது மதரீதியிலான கண்ணோட்டம் அல்ல; நாகரிக ரீதியிலான கண்ணோட்டம். இந்து என்ற சொல்லை ஒரு குறிப்பிட்ட மொழி, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறையைக் கொண்டு வரையறுக்க முடியாது. இந்துக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அனைவரையும் மதிக்கிறார்கள்.

எப்போதெல்லாம் ஒரு சமூகம் துன்புறுத்தப்பட்டபோது அப்போதெல்லாம் அது இந்தியாவுக்கு வந்தது. நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். பார்சிகளும், யூதர்களும் அப்படித்தான் வந்தார்கள். இந்தியர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பை அளிப்பதோடு, இந்த உலகளாவிய கண்ணோட்டத்தையும் பகிர்ந்துகொள்ளும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT