புதுடெல்லி: ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒமித் போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீது நேற்று (மார்ச் 16) பாகிஸ்தான் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை இந்தியா திட்டவட்டமாகக் கண்டிக்கிறது. இது ஒரு கோழைத்தனமான, மனசாட்சியற்ற வன்முறைச் செயல்.
எந்த வகையிலும் இது ஒரு ராணுவ இலக்காக இருக்க முடியாது. இந்த தாக்குதல் ஏராளான பொதுமக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கை போல சித்தரிக்க பாகிஸ்தான் முயல்கிறது.
பாகிஸ்தானின் இந்த கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல், ஆப்கனிஸ்தானின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதலாகவும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் உள்ளது. இது பாகிஸ்தானின் தொடர்ச்சியான பொறுப்பற்ற நடத்தையையும், எல்லைகளுக்கு அப்பால் வன்முறைச் செயல்களை அதிக அளவில் நடத்துவதன் மூலம் உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க முயல்வதையுமே காட்டுகிறது.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே அமைதி, சுயசிந்தனை, கருணை ஆகியவற்றுக்கான காலமாகப் போற்றப்படும் புனித ரமலான் மாதத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, இன்னும் அதிக வன்மையான கண்டனத்தைக் கோருகிறது. ஒரு மருத்துவமனையையும் அங்குள்ள நோயாளிகளையும் திட்டமிட்டு தாக்குவதை எந்த ஒரு மதமும், சட்டமும், அறநெறியும் நியாயப்படுத்தாது.
இந்த குற்றச் செயலை அரங்கேற்றியவர்களை சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அதோடு, ஆப்கனிஸ்தானில் உள்ள பொதுமக்களை பாகிஸ்தான் கண்மூடித்தனமாக தாக்குவதை எவ்வித தாமதமும் இன்றி நிறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறது. மேலும், இந்த துயரமான தருணத்தில் ஆப்கன் மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கிறது. ஆப்கனிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு நடந்ததாக ஆப்கன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சூழலில், அண்மைக் காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடங்கி மூன்று வார காலம் ஆகியுள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முன்பாக இரு தரப்பிலும் எல்லையோர பகுதியில் மாறி மாறி தாக்குதல் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.