புதுடெல்லி: அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (டிஹேச்எஸ்) புதிய விசா விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு மாணவர்களுக்கான ‘எப்’ விசா, கலாச்சார பரிமாற்ற திட்டங்களில் வருபவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் ‘ஜெ’ விசா மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ‘ஐ’ விசா ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்கப்படும்.
புதிய விதிமுறைகளின் கீழ், மாணவர் மற்றும் கலாச்சார பரிமாற்ற விசாக்களின் காலம் 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்காது. ஓராண்டாக இருந்த ஐ விசா கால வரம்பு 240 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், நாடாளுமன்ற மறு ஆய்வுக்கு உட்பட்டு, ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்ட 60 நாட்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, எப், ஜெ விசாக்களில் வருபவர்கள் தங்களுடைய படிப்பு அல்லது ஆராய்ச்சி முடியும் வரை டூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ் என்ற அனுமதியின் கீழ் அமெரிக்காவில் தங்க முடியும். இதற்குத்தான் இப்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா செல்லும் உண்மையான பயணிகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த பிரச்சினைகளை அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து எடுத்துரைத்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.