புதுடெல்லி: அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனிலிருந்து காணொலி வாயிலாக உரையாற்றினார். இது, இருநாட்டு உறவில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதிபர் டிரம்ப் பேசியதாவது: எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். நமது நாட்டின் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ள தூதர் செர்ஜியோ கோர் இங்கு ஒரு சிறந்த உரையை ஆற்ற வேண்டும் என விரும்புகிறேன். அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்; அவர் ஒரு சிறந்த தலைவர், எனது மிக நெருங்கிய நண்பர்.
இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம். எங்களின் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை தற்போது புதிய உச்சங்களைத் தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான். மார்கோ ரூபியோமிகச் சிறந்தவர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சிறந்த வெளியுறவு அமைச்சராக அவர் வலம் வருகிறார். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.
அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருக்கும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்ட வடிவத்தை எட்டியுள்ளது. நான் இந்தியாவுக்கான தூதராகப் பொறுப்பேற்று வந்த ஐந்து மாதங்களிலேயே, இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான வரைவு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறேன்’’ என்றார்.