இந்தியா

ஞானேஷ் குமார் விவகாரம்: குடியரசுத் தலைவர் உடன் இண்டியா கூட்டணி எம்பிக்கள் இன்று இரவு சந்திப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வரும் இண்டியா கூட்டணி எம்பிக்கள், இது தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கின்றனர்.

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தின் மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக இண்டியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், நீக்கப்பட்ட அல்லது புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6ல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக திருத்தம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு சாதகமாக ஞானேஷ் குமார் இவ்வாறு செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், நடுநிலை தவறி செயல்பட்ட அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இண்டியா கூட்டணி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் நோக்கில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்றனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்ற இந்த பேரணி தேர்தல் ஆணையத்தை அடைவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி, பிரியஙகா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இண்டியா கூட்டணி எம்பிக்கள் திட்டமிட்டனர். இதற்காக பேருந்துகளில் புறப்பட்ட அவர்கள் ஜந்தர் மந்தருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததைக் கண்டித்து நேற்று காந்தி நினைவிடத்தில் போராட்டம் நடத்த இண்டியா கூட்டணி எம்பிக்கள் சென்றனர்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட இண்டியா கூட்டணி சார்பில் அனுமதி கோரப்பட்டது. இண்டியா கூட்டணியின் கோரிக்கையை ஏற்று இன்று இரவு 8 மணிக்கு சந்திக்க திரவுபதி முர்மு நேரம் ஒதுக்கி உள்ளார்.

குடியரசுத் தலைவரை சந்திக்கும் முன்பாக மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஒன்று கூட இண்டியா கூட்டணி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் அவர்கள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்ல உள்ளனர்.

SCROLL FOR NEXT