உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெயும், இந்தியாவின் கச்சா எண்ணெயும் சமையல் எரிவாயும் கொண்டு வரப்படுகின்ற ஹார்முஸ் நீரிணை பிப்ரவரி மாத இறுதியில் போர் பதற்றத்தால் மூடப்பட்ட போது இந்தியாவின் நிலை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதாக கருதப்பட்டது.
பத்தில் ஒன்பது பங்கு கச்சா எண்ணெயையும் பாதிக்கும் அதிகமாக சமையல் எரிவாயுவையும் வளைகுடா வழியாக இறக்குமதி செய்யும் ஒரு நாடு இந்த இக்கட்டான சூழ்நிலையில், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசை, காலியான சமையல் அறை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் முழு சில்லறை விற்பனை நிலையத்தில் கூட பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. எந்தவொரு வீட்டிலும் சிலிண்டர் பிரச்சினை இல்லை.
இது தற்செயலானதோ, அதிர்ஷ்டவசமானதோ அல்ல. இது அரசின் திட்டமிட்ட ஒன்றன் பின் ஒன்றான நடவடிக்கையின் விளைவால் ஏற்பட்டதாகும். இறக்குமதியோடு தொடர்புடைய 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,600 ரூபாய் அளவுக்கு உயர்ந்தபோதும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை சுமார் 900 ரூபாயாக இருந்தது. இது ஏழைகளுக்கும் குறைவான விலையாகவே இருந்தது.
எரிபொருள்களைப் பொறுத்தவரை சுமையை நுகர்வோருக்கு அளிக்காமல் அரசு தாங்கிக் கொண்டது. பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்ததன் மூலம் 1.7 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு வாரக் காலத்திற்குள் சமையல் எரிவாயு சுத்திகரிப்பை அதிகரித்து இறக்குமதியால் ஏற்படும் இழப்பை பெருமளவு ஈடுசெய்தது.
அமெரிக்காவிலிருந்தும், ரஷ்யாவிலிருந்தும் இறக்குமதி செய்ததோடு புதிய எண்ணெய் வழங்கும் நாடுகளையும் இந்தியா அணுகியது. இதனால் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் வரத்தின் தேவை குறைந்தது. மேலும், வீடுகளுக்கு சிலிண்டர்களுக்குப் பதிலாக குழாய் மூலம் எரிவாயு, நிலக்கரியை எரிவாயு ஆக்கும் திட்டம் பெட்ரோலில் எத்தனால் கலத்தல் போன்ற நீண்டகால திட்டங்களுக்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
அந்நிய செலாவணி கணக்கும், இதே முறையில் திறமையாக நிர்வகிக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகள் வாங்குவதில் மூலதன லாபங்களுக்கான வரி நீக்கப்பட்டு முழுமையான அணுகல் பாதைத் திட்டத்தின் கீழ், பங்குகள் பெறுவது விரிவாக்கப்பட்டது. வெளிநாடுவாழ் இந்தியருக்கான புதிய டாலர் டெபாசிட் திட்டம் கணிசமான டாலர்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வி.அனந்த நாகேஸ்வரன்
தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் எண்ணெய், ஆபரணங்கள் அல்லாத வணிகப் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி 2026 ஏப்ரல், மே மாதங்களில் முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 12 சதவீதம் அதிகமாக இருந்தது.
எரிசக்தியில் மட்டுமின்றி பொதுவாக இறக்குமதியை சார்ந்திருப்பது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. வணிக ரீதியான பற்றாக்குறை, தேச வருமானத்தில் 8 சதவீதமாக உள்ளது. இதில், எண்ணெயை நீக்கிவிட்டால் 5 சதவீதமாகவும் எண்ணெயையும் தங்கத்தையும் நீக்கிவிட்டாலும் மூன்றரை சதவீதமாக உள்ளது.
போட்டித்தன்மையுடன், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். இது, திறன் பெற்றவர்கள் இல்லாமல் சாத்தியமாவது இல்லை. எனவே இந்திய இளைஞர்களுக்கு வர்த்தகத் திறன் பயிற்சி தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
- வி.அனந்த நாகேஸ்வரன், மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர்