பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் முன்னிலையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக்கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (வலது) மற்றும் ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆணையர் மாரோஸ் செஃப்கோவிக்.படம்: பிடிஐ
புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) நேற்று கையெழுத்தானது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடிக்கும் சூழலில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் டெல்லி வந்தனர்.
நாட்டின் 77-வது குடியரசு தினவிழா நேற்றுமுன்தினம் டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐரோப்பிய பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று 16-வது இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் முன்னிலையில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆணையர் மாரோஸ் செஃப்கோவிக் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணையதலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒப்பந்தம் இந்திய-ஐரோப்பிய உறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணம். சர்வதேச பொருளாதார சூழலில் இந்த ஒப்பந்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல. இருதரப்பின் வளமான எதிர்காலத்துக்கான புதிய வரை படம்.
இந்த ஒப்பந்தம், சிறுதொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோர் ஐரோப்பிய சந்தைகளை அதிகளவில் அணுகுவதற்கு வழிவகுக்கும்" என்றார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா பேசுகையில், ‘‘இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என்று வர்ணித்தார். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவும்- ஐரோப்பிய யூனியனும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதியில் 99 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் முன்னுரிமை கிடைக்கும்.
இது இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சியைப் பன்மடங்கு அதிகரிக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதோடு பெண்கள், கைவினைஞர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளிலேயே, சுமார் 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். எப்டிஏ பேச்சு வார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், 2022 ஜூன் மாதம் மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக எப்டிஏஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. 2024-25 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 136 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்கா எதிர்ப்பு: அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறும்போது, ‘‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி சுத்திகரித்து தருகிறது இந்தியா. அதை ஐரோப்பா வாங்குகிறது. அதன்மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்கிறது. அத்துடன் தனக்கு எதிராக தானே போரிடுவதற்கு ஐரோப்பா நிதியளிக்கிறது. இது தற்கொலைக்குச் சமம். உக்ரைன் மீதான போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளை செயலிழக்க செய்யும் வகையில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது அதிருப்தி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
விலை குறையும் பொருட்கள்: ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின் விலை குறையும். இதற்கு தற்போது 150% வரி விதிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி இந்த வரி 20%-ஆக குறையும்.
உருக்கு, ரசாயன பொருட்களுக்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. கட்டுமானம், தொழில் துறைகளில் மூலப் பொருட்களின் விலை குறையும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை, தோல், நகைகள் அதிக அளவில் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஐரோப்பாவின் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடிகார்களுக்கான இறக்குமதி வரி 100%-க்கும் மேல் உள்ளது. எப்டிஏ-வின் கீழ், ரூ.16 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட ஆடம்பர கார்களுக்கான வரி 40%-ஆக குறையும். இத்துடன் மேலும் 10 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது.