போபால்: தகுதியுள்ள விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு கொள்முதலை 60 சதவீதமாக உயர்த்தவும், உர விநியோகத்திற்கான ‘இ-டோக்கன்’ முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் மத்திய பிரதேச அரசு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, போபாலில் விவசாயிகள் நடத்தி வந்த தீவிர போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பாசிப்பயறு கொள்முதல் தொடர்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான ம.பி. விவசாயிகள், முதல்வர் மோகன் யாதவின் வீட்டை நோக்கியும் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் அரசுப் பிரதிநிதிகளுக்கும் விவசாய சங்கத் தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டது.
அதன்படி, நர்மதாபுரம், சேஹோர், ஹர்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பாசிப்பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி, கொள்முதல் வரம்பு 25 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உடனடியாக உயர்த்தப்பட்டது. மேலும், பாசிப்பயறு கொள்முதலுக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-லிருந்து ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உர விநியோகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை உர விநியோகத்திற்கான இ-டோக்கன் முறை உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்படுகிறது என மாநில விவசாயத் துறை அமைச்சர் ஐதல் சிங் கன்சானா தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.