புதுடெல்லி: நீதிபதி சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானத்துக்கு எதிராக 36 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இதையடுத்து அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரக் கோரி, திமுக, காங்கிரஸ் அடங்கிய ‘இண்டியா' கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு எதிராக 36 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணன் முராரி ஜே. உள்ளிட்ட 36 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, சில மூத்த வழக்கறிஞர்களால் ஆதரிக்கப்படும் இந்த நடவடிக்கை சரியல்ல. ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒரு நீதிபதியின் நீதித் துறை உத்தரவுகள் ஒத்துப்போகவில்லை என்பதற்காக, பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியை மிரட்டிப் பணிய வைப்பதற்கான ஒரு வெட்கமற்ற முயற்சிதான் இது.
நீதித்துறையின் தீர்ப்பை குறிவைத்து, பதவி நீக்க நடைமுறையை ஒரு கருவியாக பயன்படுத்தி, நீதிபதியை நீக்க முயற்சிக்கப்படுகிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைப்பது மற்றும் நீதித்துறை மத்தியில் அச்சத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
எம்பிக்களின் அழுத்தத்துக்கு பணிந்தால் நீதித் துறையின் சுதந்திரமும் கண்ணியமும் அழிக்கப்பட்டுவிடும். நீதித் துறை இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கண்டனத் தீர்மானத்தை ஏற்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.