மும்பை: ஐஐடி மும்பை மாணவர் தற்கொலை விவகாரத்தில் நிர்வாக விவகாரங்களுக்கான டீன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஐடி மும்பை நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே (20), கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடைப்பருவத் தேர்வின்போது கைப்பேசியைப் பயன்படுத்தி ஏஐ தளம் மூலம் விடை தேட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
தேர்வறைக்குப் பொறுப்பாளராக இருந்த பேராசிரியரும் நிர்வாக விவகாரங்களுக்கான டீனுமான சூர்யநாராயண துல்லா அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. தேர்வு முடிந்த சில மணி நேரங்களிலேயே வகோடே தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவரின் தற்கொலைக்கு சாதி பாகுபாடு காரணம் என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நேற்று டீன் பதவியிலிருந்து சூர்ய நாராயண துல்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து பேராசிரியராகத் தொடர்வதால், அவரைப் பணியில் இருந்து முழுமையாக நீக்கக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.