மும்பை ஐஐடி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

 
இந்தியா

மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்: டீன் பொறுப்பில் இருந்து பேராசிரியர் நீக்கம்

மோகன் கணபதி

மும்பை: மும்பை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பேராசிரியர் சூரியநாராயண டூல்லாவை டீன் பதவியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.

மும்பை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்த வந்த 20 வயதான மாணவர் சாஹில் வகோடே கடந்த 18-ம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலிஸாரின் முதல் தகவல் அறிக்கையில், சாஹில் தேர்வு எழுதியபோது தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய பேராசிரியரும், மாணவர் விவகாரங்களுக்கான டீனுமான சூரியநாராயண டூல்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து செப்.19 அன்று மும்பை ஐஐடி வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பை ஐஐடியில், ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மும்பை ஐஐடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

முன்னதாக, அன்று நடைபெற்ற ஒரு தேர்வின்போது, ​​தேர்வு அறையில் அந்த மாணவர் செல்ஃபோன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. விடைகளைக் கண்டறியும் நோக்கில், அவர் வினாத்தாளை 'சாட்ஜிபிடி' (ChatGPT) செயலியில் பதிவேற்றியிருந்தார்.

அந்த மாணவர் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாட பயிற்றுவிப்பாளர், துறைசார் ஆலோசகர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் அந்த மாணவரிடம் இது குறித்துப் பேசினார்கள். அவருக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கியதோடு, இந்தச் சம்பவம் அவரது கல்விப் பயணத்தைப் பாதிக்காது என்றும் உறுதியளித்தனர்.

அதன்பிறகு அந்த மாணவர் தனது விடுதி அறைக்குத் திரும்பினார். பின்னர் மாலையில், அவர் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஒரு மாணவரை இழந்ததில் மும்பை ஐஐடி ஆழ்ந்த துயரம் கொள்கிறது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர், நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நிறுவனம் தனது ஆதரவை வழங்கி வருகிறது. இந்த மரணம் தொடர்பான சூழல்கள் குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவரின் தற்கொலை விவகாரத்தில் மும்பை ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாணவர் சாஹில் வகோடேயிடம், டீன் சூரியநாராயண டூல்லா நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என்றும், அவரை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், விசாரணை முடிவடைவதற்கு முன்பாக இறந்த மாணவர் மீது பழிபோடும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மூன்று நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், 18 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மும்பை ஐஐடி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘சாஹிலின் துரதிருஷ்டவசமான மறைவு தொடர்பான சூழல்கள் குறித்து நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்த கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி விவரங்கள் மற்றும் சூழல்கள் உரிய அதிகாரிகளின் விசாரணைக்கு உட்பட்டவை. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது மறைவுக்கு முந்தைய நிகழ்வுகள் குறித்த விவரங்களை வெளியிட்டது பொருத்தமற்றது’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் மும்பை ஐஐடி இயக்குநர் பதவி விலக வில்லை என்றும், இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள் தவறானவை என்றும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ‘பேராசிரியர் சூரியநாராயண டூல்லா டீன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் மாணவர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் பேராசிரியர் ஷிரிஷ் கேடரே தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், சூரியநாராயணா டூல்லா பேராசிரியராக தொடர்வார் என்பதால் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT