இந்தியா

“கர்நாடகாவில் தண்ணீர் இருந்தால் நிச்சயம் தமிழகத்துக்கு தருவோம்” - டி.கே.சிவகுமார்

மோகன் கணபதி

பெங்களூரு: கர்நாடகாவில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் நாங்கள் அதை நிச்சயம் தமிழகத்துக்கு வழங்குவோம் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 11.719 டிஎம்சி பற்றாக்குறை நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கர்நாடக அரசு வரவேற்றுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்த தீர்ப்பு கள நிலவரத்தையே பிரதிபலிக்கிறது. எங்களுக்கே குடிநீருக்குப் போதுமான தண்ணீர் இல்லை. இருக்கும் தண்ணீரை நாங்கள் வேண்டுமென்றே தடுத்து வைத்திருக்கவில்லை. கவனமாக இருக்குமாறு விவசாயிகளிடம் கூறி இருக்கிறேன். இது தமிழகத்துக்கும் தெரியும். ஏன் உலகத்துக்கே தெரியம்.

தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக இருப்பதால் காவிரி ஆற்றுக்குச் செய்யப்படும் பாரம்பரிய நன்றிக் காணிக்கையான பகினாவை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை. எங்களிடம் தண்ணீர் இருந்தால் நிச்சயம் நாங்கள் அதை தமிழகத்துக்கு வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட நீதி என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் என்.செல்லுவராயசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழகத்துக்குக் கிடைத்த பின்னடைவாகப் பார்ப்பதைவிட, கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்க வேண்டும். எங்களிடமே போதுமான நீர் இருப்பு இல்லாதபோது, தமிழகத்துக்கு எப்படி தண்ணீரை திறந்துவிட முடியும்?

இரு மாநிலங்களின் தேவைகளையும் சம அளவில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்று கூறுவதைவிட, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தற்போதைய உத்தரவின்படி நாங்கள் 2 ஆயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்வு தகராறுகளை தீர்ப்பதற்காக முதல்வர் டி.கே.சிவகுமார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களின் முதல்வர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். முன்பெல்லாம் முதல்வர்கள் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கே முன்வருவதில்லை. முதல்வர் டி.கே.சிவகுமாரின் முயற்சி நல்ல பலனைத் தரும்.” என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT