சித்தார்த் நகர் (உத்தரப் பிரதேசம்): “நாடு பிரிக்கப்பட்டபோது நரேந்திர மோடியை போன்ற ஒருவர் பிரதமராக இருந்திருந்தால், இந்தியாவுக்கு யாரும் தீங்கு விளைவித்திருக்க முடியாது,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டின் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சித்தராத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், “பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் இந்தியாவுக்கு யாரும் தீங்கு விளைவித்திருக்க முடியாது.
பிரிவினையின்போது லட்சக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதைக் கேட்கவோ அல்லது அந்த வலியை வெளிப்படுத்தவோ யாரும் இல்லை. அதிகாரத்தில் இருந்தவர்கள் சனாதன தேசத்தை பல துண்டுகளாகப் பிரித்தனர். வரலாற்றின் அந்த இருண்டு அத்தியாங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கான ஒரு உந்துதலாக இந்த நாள் அமைகிறது.
1947-ல் நாடு சுதந்திரம் அடைந்தது. பாகிஸ்தான் ஆதரவாளர்களால் கோரப்படாத நிலப்பகுதிகள் கூட வலுக்கட்டாயமாக பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. பஞ்சாப் ஒப்படைக்கப்பட்டது; வங்கத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளும் ஒப்படைக்கப்பட்டன. அதிகாரத்தின் மீதான பேராசை காரணமாகவே இவை செய்யப்பட்டன.
வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் அவர்கள் மவுனம் காத்தனர். ஏனெனில், தங்கள் வாக்கு வங்கியை இழந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். வாக்கு வங்கியை தங்கள் குடும்பச் சொத்தமாக மாற்றியதன் மூலம் அவர்கள் குழப்பத்தையும் சீர்குலைவையும் பரப்பினர்.
அக்காலத்தில் நம்மிடம் வலிமையும் புத்திசாலித்தனமும் இருந்தன. நமக்கு வலிமை குறைவு இருக்கவில்லை. அப்படியென்றால் என்ன குறைபாடு இருந்தது? சாதி, பிராந்தியம், மொழி சார்ந்த உள்மோதல்களால் நாம் பிளவுபட்டிருந்தோம்.
மகத்தான மனிதர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்ற முழக்கம் எதிரொலித்தது. ஆனால், சுயநலத்துக்காக அவர்கள், பிராந்தியம் மற்றும் மத அடிப்படையில் மக்களை மோதவிட்டனர். இது நாட்டை தொடர்ந்து பலவீனப்படுத்தியது. அதற்கான விலையை இந்தியா இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை ஒருகாலத்தில் பிரிக்கப்படாத இந்தியாவின் பகுதிகளாக இருந்தன. லக்னோ, சஹாரன்பூர், கான்பூர், சம்பல், அலிகார் ஆகிய இடங்களில் கலவரத்தைத் தூண்டிவிடச் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், மக்கள் அவர்களை வெற்றிபெற அனுமதிக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.