

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. கரூரில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாதகவின் தீரன் திருமுருகன், மதுரை வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாநில அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “மாநில அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்க விரும்பினால் அதில் உயர் நீதிமன்றத்துக்கு என்ன பிரச்சினை? வேலைவாய்ப்பு தொடர்பான விவகாரத்தில் பொது நல வழக்கு தொடர முடியாது.” என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி பர்திவாலா, “அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்தால் அதை எப்படி கேள்வி கேட்க முடியும்? ஒருவேளை அந்த விபத்தில் குடும்பத்தின் ஒரே வரமானம் ஈட்டும் நபர் உயிரிழந்திருந்தால், அவரது மகன் அல்லது மகளுக்கு அரசு வேலை வழங்கக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மனுவை எதிர்த்த வழக்கறிஞர் ஒருவர், “மாநில அரசுக்கு இதுபோன்று வேலைகளை வழங்கும் தனிப்பட்ட விருப்ப உரிமை இல்லை. நெரிசல் சம்பவத்துக்குப் பொறுப்பான தரப்பினரே தற்போது மாநிலத்தை ஆள்கின்றனர். எனவே, இந்த முடிவில் நலன்களின் முரண்பாடு உள்ளது.” என்று வாதிட்டார்.
அப்போது, அந்த வழக்கறிஞர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று நீதிபதி சந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு, அவர் ஒரு அரசியல் கட்சிக்காக ஆஜராகி உள்ளதாகக் கூறினார். அப்போது நீதிபதி சந்திரன், “இங்கு அரசியலைக் கொண்டு வராதீர்கள்” எனக் கூறினார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.