இந்தியா

நீங்கள் ‘சிங்கம்’ என்றால் நான் ‘புஷ்பா’ - உ.பி போலீஸ் அதிகாரிக்கு திரிணமூல் வேட்பாளர் பதிலடி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: உ.பி. மாநில போலீஸ் அதிகாரி `சிங்கம்` என்றால் நான் `புஷ்பா` என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜஹாங்கீர் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 2-ம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா கண்காணிப்புப் பணிக்காக வந்துள்ளார். அவர் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் ஏற்படும் மோதல்களைத் தடுப்பது, வாக்குச்சாவடி கண்காணிப்பு என மேற்கு வங்கத்தின் பல்வேறு தொகுதிகளில் பம்பரமாக சுற்றி வருகிறார்.

இந்நிலையில் ஃபால்டா தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கு எதிரான புகார்கள் வந்தன. அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோவை, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பதில் தரும்விதமாக ஜஹாங்கீர் கூறியதாவது: இது மேற்குவங்கம். உ.பி. மாநிலம் அல்ல. அவர் (அஜய் பால் சர்மா) சிங்கம் என்றால் நான் புஷ்பா. பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட எந்தவொரு போலீஸ் அதிகாரியின் மிரட்டலும், எச்சரிக்கையும் இங்கு எடுபடாது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு என்னுடைய அலுவலகத்துக்கு வந்து என்னுடைய பாதுகாப்பு ஊழியர்களை மிரட்டி விட்டுச் சென்றுள்ளார் அஜய் பால் சர்மா. என்னுடைய குடும்பத்தாரையும் அவர் மிரட்டியுள்ளார். இதுதானா போலீஸ் கண்காணிப்பாளரின் வேலை? வேட்பாளர்களின் குடும்பத்தை மிரட்டுவதுதான் அவர் வேலை பார்க்கும் லட்சணமா?

ஏதாவது புகார் என்றால் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கோ அல்லது தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமோதான் அவர் சொல்ல வேண்டும். மிரட்டல் விடுக்கக் கூடாது. வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று மிரட்ட வேண்டும் என்று எந்தத் தேர்தல் விதிகளிலும் சொல்லவில்லை. திரிணமூல் தொண்டர்களையும், வேட்பாளர்களையும் மிரட்டுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம்" என்றார்.

தெலுங்கில் வெளிவந்த `புஷ்பா' திரைப்படத்தில் எவருக்கும் அஞ்சாத வீரராக நடித்திருப்பார் நடிகர் அல்லு அர்ஜுன். அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தன்னை `புஷ்பா' என்றும் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்றும் ஜஹாங்கீர்கான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT