புதுடெல்லி: இந்தியத் தேர்தல்கள் உலகுக்கே ஓர் உண்மையான ஜனநாயகத் திருவிழா என்று அசாம், கேரளா, புதுச்சேரி மாநில தேர்தல்களை நேரில் பார்வையிட்ட சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான ஐஇவிபி-2026-ன் ஒரு பகுதியாக, 22 நாடுகளைச் சேர்ந்த 38 சர்வதேசப் பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் அளவு, துல்லியம், வேகம் ஆகியவற்றை நேரடியாகக் கண்டு பாராட்டினர். அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த அனுபவத்தை “ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா” என்று வர்ணித்த பிரதிநிதிகள், இந்தியாவில் அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்ல்களில் சாதனை அளவிலான வாக்காளர் பங்கேற்பு, நுணுக்கமான திட்டமிடல், தடையற்ற தேர்தல் செயலாக்கம் ஆகியவற்றைப் பாராட்டினர்.
“இந்தியத் தேர்தல்கள், உலகுக்கே ஓர் உண்மையான ஜனநாயகத் திருவிழா. வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது. இந்தச் செயல்முறையிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இது ஒரு மாபெரும் செயல்முறை. இது மிகச் சரியாகச் செய்யப்பட்டுள்ளது” என்று குரோஷியா நாட்டைச் சேர்ந்த சர்வதேசப் பார்வையாளரான பிரானிமிர் ஃபர்காஸ் கூறினார்.
சர்வதேசப் பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக (ஏப்ரல் 8 & 9) அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்குச் சென்றனர். அங்கு சட்டப் பேரவைத் தேர்தல்களின்போது வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டனர். அங்கு, நன்கு திட்டமிடப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் ஆகியவை மூலம், தேர்தல் பொருட்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த மாநிலங்களில் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் அவர்கள் கலந்துரையாடினர். மேலும், தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகங்களில், வாக்குச் சாவடிகளை 100% இணையவழியில் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகளையும் அவர்கள் பார்வையிட்டனர். அவற்றை "வெளிப்படைத்தன்மையின் வலுவான தூண்" என்று அவர்கள் விவரித்தனர்.
"இந்தியாவில் தேர்தல் செயல்முறை என்பது, நிச்சயமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு களம்" என மெக்சிகோ நாட்டின் பிரதிநிதி ஊக் கிப் எஸ்படாஸ் கூறினார்.
தேர்தல் நாளன்று காலையில், அந்தப் பிரதிநிதிகள் மாதிரி வாக்குப்பதிவைக் கவனித்தனர். அதைத் தொடர்ந்து, இந்த 22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உண்மையான வாக்குப்பதிவு செயல்முறையைக் காண்பதற்காக, அசாமின் காம்ரூப் மெட்ரோ, காம்ரூப் கிராமப்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள், கேரளத்தின் கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள், புதுச்சேரியில் உள்ள சில வாக்குச்சாவடிகள் ஆகியவற்றுக்கு வெவ்வேறு குழுக்களாகச் சென்றனர்.
சாய்வுப் பாதைகள், சக்கர நாற்காலிகள், குழந்தைகள் காப்பக வசதிகள் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய அம்சங்களுக்கு அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அத்துடன் பெண்கள், மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக வாக்குச் சாவடிகளுக்கும் அவர்கள் சென்று பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்திய தேர்தல் மிக அதிகபட்ச உள்ளடக்கிய தன்மையைக் கொண்டுள்ளது என்று கென்யா நாட்டின் பிரதிநிதி ஃபஹிமா அரபத் அப்தல்லா தெரிவித்தார்.
"வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. சக்கர நாற்காலி, குழந்தைகள் காப்பக வசதிகள் என அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளன" என்று நமீபிய நாட்டின் பிரதிநிதி பவுலஸ் ஷிக்வேதா கூறினார்.
பிரதிநிதிகள் மாவட்ட அளவிலான ஊடக கண்காணிப்பு மையங்களைப் பார்வையிட்டதோடு, இணைய இணைப்பு மூலம் தேர்தல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும் பாராட்டினர். மேலும், அவர்கள் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மரம் நடும் இயக்கங்களிலும் பங்கேற்றனர்.
"இந்தியாவின் சிறந்த விஷயங்களில் ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு. நாங்கள் கற்றுக்கொண்ட சில விஷயங்களை எங்களது நாட்டில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்று ஆராய்வோம். இது ஒரு திருவிழாவைப் போன்றது. இந்த உணர்வுதான் தேர்தல்களில் இருக்க வேண்டும்" என்று சியரா லியோன் நாட்டின் பிரதிநிதி அபூபக்கர் மஹ்மூத் கொரோமா கூறினார்.
புதுச்சேரியில், பறக்கும் படைகள், ட்ரோன் அடிப்படையிலான கண்காணிப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள், நீலா என்ற வரவேற்பு ரோபோ போன்ற புதுமையான முயற்சிகளால் பிரதிநிதிகள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். கேரளத்தில், அவர்கள் 'ஜென் ஸீ' எனப்படும் இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்ட வாக்குச்சாவடியைப் பார்வையிட்டு, முதல் முறை வாக்காளர்களின் உற்சாகத்தைப் பாராட்டினர்.
தடையின்றி வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும், அதிக வாக்காளர் வருகையும், வருகை தந்த குழுக்கள் அந்த பிரதிநிதிகள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் நிர்வாகத்தின் பிரமாண்டத்தை நேரில் காண வாய்ப்பளித்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் (IEVP) என்பது, பல்வேறு நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் (EMBs), சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தேர்தல் ஆணையத்தின் ஒரு முதன்மை முன் முயற்சியாகும். இத்திட்டம், இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பு, நிறுவன வழிமுறைகள், செயல்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவை தொடர்பான விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதோடு, தேர்தல் மேலாண்மையில் உள்ள சிறந்த நடைமுறைகள், புதுமைகள் ஆகியவற்றைச் சர்வதேசப் பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.