இந்தியா

ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிக் கிளையில் ரூ.590 கோடி மோசடி: 24 மணி நேரத்துக்குள் ரூ.578 கோடி மீட்பு

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியானாவில் உள்ள ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட நிலையில், 24 மணி நேரத்துக்குள் ரூ.578 கோடி மீட்கப்பட்டது என்று மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார்.

ஹரியானா அரசு, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கிக் கிளையில் சில கணக்குகளை வைத்துள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.590 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

          

இதுகுறித்து ஆய்வு செய்ய ‘கேபிஎம்ஜி’ என்ற சர்வதேச நிறுவனத்தின் தடயவியல் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐடிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹரியானா சட்டப் பேரவையில் முதல்வர் நயாப் சிங் சைனி நேற்று பேசிய தாவது: ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி நடந்துள்ளது. இதையடுத்து அரசு துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்துக்குள் பணம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.556 கோடி டெபாசிட் செய்யப்பட்ட பணமும், ரூ.22 கோடி வட்டிப் பணமும் ஆக மொத்தம் ரூ.578 கோடி 24 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டுவிட்டது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தப்ப முடியாது. சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.முன்பு இருந்த அரசுகள் இதுபோன்ற விவகாரங்களை மூடி மறைத்தன. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எந்தப் பிரச்சினை என்றாலும் அதைத் தீர்த்து வைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT