இந்தியா

“தாய் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் உணர்கிறேன்” - பிரதமர் மோடி உருக்கம்

ராம்நாத் கோவிந்த் சுயசரிதை வெளியீட்டு விழா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தாய் இல்​லாத வெற்​றிடத்தை இப்​போதும் உணர்கிறேன் என்று ராம்​நாத் கோவிந்த் சுயசரிதை வெளி​யீட்டு விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி உருக்​க​மாக பேசி​யுள்​ளார்.

குடியரசு முன்​னாள் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் ‘இந்​தி​யக் குடியரசின் வெற்​றி: என் வாழ்க்​கை, என் போராட்​டங்​கள்’ என்ற பெயரில் எழு​தி​யுள்ள சுயசரிதை புத்தக வெளி​யீட்டு விழா டெல்லி விஞ்​ஞான் பவனில் நேற்று நடை​பெற்​றது. விழா​வில் புத்​தக்​கத்தை வெளி​யிட்டு பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

குடியரசு முன்​னாள் தலை​வர் ராம்​நாத் கோவிந்​தின் சுயசரிதை புத்​தகத்தை வெளி​யிடு​வ​தில் பெரு​மிதம் கொள்​கிறேன். அவரது சுயசரிதை இந்​திய ஜனநாயகத்​தின் பாரம்​பரிய அடை​யாள​மாக மாறும். வரும் தலை​முறை​யினர் அதிலிருந்து கற்​றுக்​கொள்ள வேண்​டிய விஷ​யங்​கள் ஏராள​மாக உள்​ளன. இளைய தலைமுறையினரிடம் ஒரு வேண்​டு​கோள் விடுக்​கிறேன்.

இது ரீல்ஸ் காலம்; சமூக ஊடக பிரபலங்​கள் உங்​களை வேறு திசை​யில் ஈர்த்து உங்​களது கவனத்தை சிதறடிக்​கக்​கூடும். குறுக்கு வழியைத் தேடிப் போகும் இந்​தக் கால​கட்​டத்​தில் ரயில் நிலை​யங்​களில் எழுதப்​பட்​டிருக்​கும் ஒரு விஷ​யத்தை நாம் நினை​வில் கொள்ள வேண்​டும். குறுக்​கு​வழிகள் உங்​கள் வாழ்வை சீரழித்து விடும். இளைஞர்​களே நீங்​கள் குறுக்கு வழியைத் தேர்ந்​தெடுக்க விரும்​பி​னால் உங்​களுக்கு பிடித்​த​மானவர்​களின் சுயசரிதையை படி​யுங்​கள். சுயசரிதைகளைப் படித்து மற்​றவர்​களின் போராட்​டங்​களி​லிருந்து பாடம் கற்​றுக்​கொள்ள வேண்​டும்.

குடியரசுத் தலை​வர் பதவியி​லிருந்து வில​கிய பின்​னரும் கோவிந்த் ஓய்​வெடுக்​க​வில்​லை. இந்​திய ஜனநாயகத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யத்தை உரு​வாக்​கும் நோக்​கில், “ஒரே நாடு; ஒரே தேர்​தல்” என்ற திட்​டத்​துக்​காக தீவிர​மாக பணி​யாற்றி வரு​கிறார். இந்​திய ஜனநாயகத்தை வலுப்​படுத்​து​வ​தில் அவர் தொடர்ந்து பங்​களிப்பை வழங்கி வரு​கிறார்.

அவரது சுயசரிதையை இளைஞர்​கள் அனை​வரும் கட்​டா​யம் படிக்க வேண்​டும். ராம்​நாத் கோவிந்த் தனது புத்​தகத்​தில் அவரது தாயார் குறித்து எழு​தி​யுள்​ளார். வீட்​டில் ஏற்​பட்ட தீ விபத்​தால் அவரது தாயார் எப்​படி இறந்​தார் என்​பதை புத்​தகத்​தில் குறிப்​பிட்​டுள்​ளார். அவரது வலியை நான் உணர்​கிறேன். நான் அதிர்​ஷ்டம் மிக்​கவன். எனது தாயார் 100 ஆண்​டு​கள் வரை வாழ்ந்து என்னை ஆசீர்​வ​தித்​துச் சென்​றார்.

ஆனாலும், அவர் இல்​லாத வெற்​றிடத்தை இப்​போதும் நான் ஆழமாக உணர்​கிறேன். ஒரு​வரின் மன உறுதி எப்​படிக் கடின​மான சூழல்​களைக் கடந்து மிக உயர்ந்த அரசி​யலமைப்​புப் பதவிக்கு உயர உதவும் என்​பதை ராம்​நாத் கோவிந்​தின்​ வாழ்க்கை நமக்​கு காட்​டு​கிறது. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி பேசினார்​.

SCROLL FOR NEXT