புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரச்சார ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இச்சூழலில் ஐ-பேக் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மின்னஞ்சலில் மேற்கு வங்கத்தில் அடுத்த 20 நாட்களுக்கு பணிகளை நிறுத்தி வைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐ-பேக் தனது செயல்பாடுகளை நிறுத்துவதால் திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐ-பேக், வாக்குச்சாவடி அளவில் தரவுகளை சேகரித்து, அதன் அடிப்படையில் தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுத்து தருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதாக திரிணமூல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்வது கடினமாக அமையும் வாய்ப்புகள் உள்ளன. திரிணமூல் ஆதரவாளர்கள் எங்கு வசிக்கின்றனர் என்பது குறித்த தரவுகளும் ஐ-பேக் வசம் உள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக முதல்வர் மம்தா அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பணியை ஐ-பேக் நிறுவனமே செய்து வந்தது. இதற்கு அத்திட்டங்களை அந்நிறுவனமே வடிவமைத்தது காரணம் ஆகும்.
இந்நிலையில் ஐ-பேக் அலுவலர்கள் யாரும் தங்கள் வேலையை இழக்க மாட்டார்கள் என்றும், அனைவருக்கும் தங்கள் கட்சி ஊதியம் வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதே சமயம், "ஐ-பேக் முழுமையாக மூடப்படவோ அல்லது அதன் அலுவலர்கள் எவரும் கைது செய்யப்படவோ இல்லை. ஐ-பேக் மையக் குழுவின் பணி திரிணமூல் கட்சிக்காக தொடருகிறது. அதன் அலுவலர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.