புதுடெல்லி: கடந்த ஏழு ஆண்டுகளில் 161 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளேடு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது: வெளியுறவுத் துறை அமைச்சராக ஏழு நீண்ட மற்றும் சவாலான ஆண்டுகளைக் கடந்த பிறகும், என்னால் முழுமையான புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடிகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒவ்வொரு நாளும் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். பெரும்பாலும் தினமும் புதிய இடங்களில் இருக்க வேண்டிய சூழல் நிலவும்.
2019-ல் அமைச்சராகப் பதவியேற்றது முதல் இதுவரை 161 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளேன். இதில் 2026-ம் ஆண்டில் மட்டும் செய்த 23 பயணங்களும் அடங்கும். வெவ்வேறு கால மண்டலங்களுக்கு இடையே தொடர்ச்சியாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், வழக்கமான 24 மணிநேர கால அட்டவணையைப் பின்பற்றுவதோ அல்லது தொடர்ந்து ஏழு மணிநேரம் தூங்குவதோ சாத்தியமற்றதாகிறது.
இதனால் சூழலுக்கு ஏற்ப எனது பணி அட்டவணையைத் தொடர்ந்து மாற்றியமைத்துக் கொள்கிறேன். அதுவே எனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வெளிநாட்டுப் பயணங்களை நிர்வகிப்பது மட்டுமின்றி, முக்கியமான தொலைபேசி அழைப்புகளுக்காக நள்ளிரவில் விழித்திருந்து பேசிவிட்டு தூங்க முயற்சிக்கும் சூழலும் ஏற்படுகிறது.
உலக நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பதோடு, அமைச்சராக உள்நாட்டுப் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இத்தகைய பணிச்சுமைகளுக்கு இடையே உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் மனதை அமைதியாக வைத்திருக்கவும் நான் தொடர்ந்து யோகா பயிற்சி செய்கிறேன்; அவ்வப்போது இசை கேட்கிறேன்; திரைப்படங்களைப் பார்க்கவும் புத்தகங்களைப் படிக்கவும் முயற்சி செய்கிறேன். மற்றவர்கள் செய்யும் சாதாரண விஷயங்களைத்தான் நானும் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.