

போபால்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், வனத்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் சர்மாவுக்கு தொடர்புடைய இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2.5 கிலோ தங்கம், 1.6 கிலோ வெள்ளி, ரூ.26 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் சஞ்சீவ் குமார் சர்மா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில், 2018-ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்திடம் சோதனை வாரண்ட் பெற்ற லோக் ஆயுக்தா போபால் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் சஞ்சீவ் குமாருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். லோக் ஆயுக்தா தலைமை இயக்குநர் யோகேஷ் தேஷ்முக் உத்தரவின் பேரில், காவல் துறை ஐ.ஜி. மனோஜ் குமார் சிங் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவ் குமார் சர்மாவின் அரசு குடியிருப்பு மற்றும் அலுவலகம், சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த வீடு என மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. இதில், ரூ.26.36 லட்சம் ரொக்கம், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.9 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சஞ்சீவ் குமார் சர்மாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ‘எக்கோடெல் ரிசார்ட்’ மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான ‘செரினிட்டி தி வில்லா’ ஆகிய இரு சொகுசு விடுதிகள் குறித்த விவரங்களும் சிக்கியுள்ளன. இவற்றின் துல்லியமான மதிப்பீடு அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட உள்ளது.
28 நிலப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா கே.யு.வி. ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் ஒரு ஸ்கூட்டர் என மொத்தம் ரூ.31.2 லட்சம் மதிப்பிலான வாகனங்களும், சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், சஞ்சீவ் குமார் சர்மா தனது வருமானத்தை விட 228% அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்திருந்தது. ஆனால், நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிந்தைய மதிப்பீட்டில், அவர் வருமானத்துக்கு அதிகமாகச் சுமார் 560% சொத்து சேர்த்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனது மனைவி மற்றும் பிற தனிநபர்களின் பெயர்களிலும் அவர் சொத்துகளை வாங்கி குவித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள சொத்துகளின் தற்காலிக மதிப்பு சுமார் ரூ.7.6 கோடி என லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது. நில ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் முழுமையான மதிப்பீட்டுக்குப் பிறகு இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.