டிஎஸ்பி சங்கி ரெட்டி பீம் ரெட்டி
ஹைதராபாத்: ஹைதாராபாத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சஞ்சல்கூடா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீஸ் கம்ப்யூட்டர் சர்வீசஸ் (பிசிஎஸ்) துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் சங்கிரெட்டி பீம்ரெட்டி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 2ம் தேதி இப்ரஹிம்பட்டினத்தில் உள்ள டிஎஸ்பி பீம்ரெட்டியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகாவிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதில் டிஎஸ்பி பீம்ரெட்டி ரூ.200 கோடிக்கு மேல் அசையும் மற்றும் அசையா சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது. சோதனையில் 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஹைதராபாத் இப்ரஹிம்பட்டினத்தில் ஒரு பங்களா, டெலிகாம் நகரில் 2 மாடி கட்டிடம், தெல்லாபூரில் 2 வீடுகள், சங்காரெட்டி மாவட்டம், ஜகீராபாத்தில் 3.5 ஏக்கர் விவசாய நிலம், கர்நாடகாவில் 45 ஏக்கர் நிலம், விகாராபாத்தில் 1000 சதுர அடியில் வீட்டுமனை மற்றும் 2 ஏக்கர் விவசாய நிலம், ராகவேந்திரா ராக் அண்ட் சாண்ட் மினரல்ஸ் நிறுவனத்தில் ரூ.75 லட்சத்தில் பங்கு என பல்வேறு சொத்துகளையும் ரூ.3.60 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி டெபாசிட் ரூ.19.91 லட்சத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முடக்கினர்.
சோதனையின்போது, டிஎஸ்பி வீட்டில் ஒரு டைரி கிடைத்தது. அதில் அவர் தனது சொத்து விவரம் முழுவதையும் எழுதி வைத்திருந்தார். அதை வைத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரின் அனைத்து சொத்துகளையும் முடக்கியுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட டிஎஸ்டி பீம்ரெட்டியை நேற்று முன்தினம் இரவு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.