கோப்புப் படம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில், காதலனுடன் ஓடிப்போன மனைவியைக் கண்டுபிடித்த கணவர், அவரது விருப்பப்படியே காதலனுக்கே முறைப்படி திருமணம் செய்து வைத்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள மாலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பெற்றோரின் கட்டாயத்தால் திருமணம் நடந்ததால், அப்பெண் தன் பள்ளிப் பருவ காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பெண் திடீரென கணவரின் வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனுடன் ஹர்தோய் பகுதிக்குச் சென்றுவிட்டார்.
மனைவியைக் காணவில்லை என கணவர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், இருவரின் இருப்பிடத்தையும் கண்டறிந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு அழைத்து வந்தனர். காவல் துறையினர் முன்னிலையில் இரு வீட்டாரும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, தன் கணவருடன் தொடர்ந்து வாழ விரும்பவில்லை என்றும், காதலனுடனேயே வாழ விரும்புவதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
மனைவியைக் கட்டாயப்படுத்தி வாழ வைப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த கணவர், அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் அருகில் உள்ள கோயிலில் அந்தப் பெண்னுக்கும் அவரது காதலனுக்கும் இந்து முறைப்படி மாலை மாற்றி முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும், கணவரே முன்னின்று தன் மனைவியை அவரது காதலனுடன் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். கணவரின் இந்த விசித்திரமான முடிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.