இந்தியா

குஜராத்: மனைவி தீக்குளிப்பதை வீடியோ எடுத்த கணவன் கைது

செய்திப்பிரிவு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் இச்சாபோர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் சஹா (33). இவரது மனைவி பிரதிமாதேவி. இருவரும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதிக்காததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வீட்டில் கடந்த 4-ம் தேதி கணவன் மனைவிக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பிரதிமாதேவி தீக்குளித்தார். இதுகுறித்து இச்சாபோர் உதவி ஆணையர் கோஹில் நேற்று கூறுகையில், ‘‘மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரதிமா தேவியிடம் 11-ம் தேதி வாக்குமூலம் பெற்றனர். அன்றைய தினமே அவர் உயிரிழந்தார்.

ரஞ்சித்திடம் விசாரணை நடத்தியதில், தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க மொத்த சண்டையையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மனைவியை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த ரஞ்சித் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT