கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் சோரபாகன் பகுதியில் நவராத்திரியையொட்டி அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 13 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘கனமழை பெய்ததால் பந்தலுக்கு வெளியில் காத்திருந்த மக்கள் மழையிலிருந்து தப்பிக்க ஒரே நேரத்தில் பந்தலுக்குள் நுழைய முயன்றனர்.
அதேநேரம், பந்தலுக்குள் இருந்தவர்கள் அங்கேயே தங்கியிருக்க முயன்றுள்ளனர். இந்தச்சூழலில், “பந்தல் சரிந்து விழப்போகிறது, உடனே வெளியேறுங்கள்” என்று ஒலிபெருக்கியில் அமைப்பாளர்கள் அறிவிப்பு செய்துள்ளனர்.
இதனால் பீதியடைந்த மக்கள் அவசரமாக வெளியேற முயல, மறுபுறம் ஒரு பிரிவினர் உள்ளே செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளும் நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
‘பந்தல் சரிந்து விழப்போகிறது’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சோரபாகன் துர்கா பூஜை கமிட்டி செயலாளர், துணைத் தலைவர், பந்தல் வடிவமைப்பாளர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்து 10 நாள் காவலில் எடுத்துள்ளனர்.