இந்தியா

ஆட்சி பறிபோனதும் கட்சிகள் பல உடைவதும், சில உறுதியாக இருப்பதும் எப்படி? - ஓர் அலசல்

போத்தி ராஜ்.க

ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஆட்சி மாறியதும், அதிகாரத்தை பறிகொடுத்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், புதிதாக அதிகாரத்துக்கு வந்த கட்சியில் இணைவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நிர்வாகிகள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு கடந்த காலங்களில் மாறினர். தேசிய அளவிலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலரும் விலகி பாஜகவில் சேர்ந்த சம்பவங்களும் நடந்தன.

இந்தக் கூட்டம் கூட்டமாக கட்சி மாறும் போக்கு என்பது எதை உணர்த்துகிறது என்பது தெரியவில்லை. ஏன் கட்சிகள் தேர்தலுக்குப் பின் உடைகின்றன, ஏன் தனிநபர்கள் கட்சி மாறுகிறார்கள், கொள்கையில் சிக்கலா, சிந்தாந்தத்தில் பிரச்சினையா, விசுவாசமின்மையா... எதில் பிரச்சினை என்ற கேள்வி எழுகிறது.

இதில் சில கட்சிகள் திடீரென உடைகின்றன அல்லது மீள முடியாத அளவுக்குச் சிதைந்துபோவதும் எப்படி எனத் தெரியவில்லை. ஆனால், வேறு சில கட்சிகள் ஆட்சியைப் பறிகொடுத்த போதிலும் உடையாமல், சிதையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் உருவாகிறது.

அதிமுகவில் இருந்து தவெக...

தேசிய அளவில் சமீபத்தில் நடந்த கட்சி மாறுதல்கள் குறித்து பார்க்கலாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான ஆட்சியில் இருந்த திமுக, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றபின், பிற கட்சிகளில் இருந்து பல நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் இணைந்தனர்.

திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்த கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் சட்டப்பேரவையில் அந்தக் கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து புதிய விசுவாசத்தை காண்பித்தனர். இந்த விவகாரம் அதிமுகவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சிறிது நாட்களிலேயே அடங்கி சமாதானமாகினர். அதிமுக, திமுகவின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக இருப்பதால், நிர்வாகிகள் பலர் வெளியேறினாலும் பெரிதாக பாதிப்பு இல்லை.

திணறும் திரிணமூல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் இதைவிட மோசமான சம்பங்கள் நடந்தன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் எதிர்க்கட்சியைப் போலவே தனியாக சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபி) இணைந்துவிட்டனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி அரசு பதவியிலிருந்து இறக்கப்பட்டதும், கட்சிக்குள் மிகப் பெரிய பிளவும், கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

சிதைக்கப்பட்ட சிவசேனா

இதேபோல கடந்த காலங்களில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேர் திடீரென தனியாகச் செயல்பட்டனர். மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து வெளியேறியதால், சிவசேனா கட்சியை ஷிண்டே தலைமையிலான பிரிவு கைப்பற்றியது.

இதையடுத்து, கட்சியைத் தொடங்கி நடத்திய பாரம்பரியம் கொண்ட பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியை இழந்து தவித்தார். சில எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் துணையுடன் உத்தவ் சிவசேனா பிரிவு என்ற பெயரில் வலம்வந்தார். இப்போது உத்தவ் சிவசேனா மேலும் பிளவுபடும் சூழலில் பரிதாபத்தில் இருக்கிறது.

கட்சி மாறி வாக்கு விசுவாசம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் இந்தியா கூட்டணி எம்எல்ஏக்கள் பலரும் என்டிஏ கூட்டணி ஆதரவு பெற்ற பரிமல் நத்வானிக்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கர்நாடகாவிலும் எம்எல்சி தேர்தல் நடந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சில எம்எல்ஏக்களின் வாக்கு, காங்கிரஸுக்கும் கிடைத்தது.

ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே 7 எம்.பிக்களை இழந்துவிட்டது. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி 3 எம்.பிக்களை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டது. சமீபத்தில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சில எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர்.

சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மன்ப்ரீத் சிங் பாதல், மஞ்சிந்தர் சிங் சிர்சா பாஜகவில் ஐக்கியமாகி டெல்லி அமைச்சர்களாக மாறிவிட்டனர்.

2014-ம் ஆண்டுக்குப் பின்…

பாஜக மத்தியில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், பிரதமர் மோடியின் ஆட்சியால் ஈர்க்கப்பட்டும், பாஜகவின் கட்டுக்கோப்பான கட்சி நடத்தும் பாணி, வலுவான கட்டமைப்பு, தலைமைக்கு கட்டுப்படும் தன்மை ஆகியவற்றால் காங்கிரஸிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பாஜகவில் சேர்ந்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பலரும் பாஜகவில் சேர்ந்ததை பட்டியலிட்டால் பெரிதாக மாறிவிடும். அவ்வாறு பாஜகவில் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் முதல்வர் பதவி, அமைச்சர் பதவி, மத்திய அமைச்சர் பதவி, எம்.பி. பதவி கொடுத்து கைமாறு செய்யப்பட்டது.

பாதி காங்கிரஸ், பாதி பாஜக...

பாஜகவில் தற்போது இருக்கும் 3 மாநில முதல்வர்களான அசாமின் ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா, அருணாச்சலப் பிரதேசத்தின் பீமா கண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் காங்கிரஸில் இருந்து பாஜக பக்கம் சாய்ந்தவர்கள்தான். மணிப்பூரில் முதல்வராக இருந்த பிரேன் சிங், மத்திய அமைச்சர்களாக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜு, ராவ் இந்திரஜித் சிங், ஜிதின் பிரசாத், ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோர் காங்கிரஸை பின்புலமாகக் கொண்டவர்கள்தான்.

இது தவிர காங்கிரஸ் கட்சியில் தலைமுறைகளாக இருந்து விஸ்வாசம் மிக்கவர்களாக இருந்த பலரும் ஆட்சி அதிகாரம் சென்றதும் பாஜக பக்கம் மாறினர்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், பீமா கண்டு, அசோக் சவான், எஸ்.எம்.கிருஷ்ணா, நாராயண் தத் திவாரி, திகம்பர் காமத், கிரண் குமார், ரெட்டி, விஜய் பகுகுணா என பலரும் பாஜகவில் இணைந்தனர். இதில் பீமா கண்டுவைத் தவிர பலருக்கும் பெரிதாக பதவிகளை பாஜக தரவில்லை.

கட்சியை உடைக்கும் உத்தி

அனைத்துக் கட்சிகளிலும் அதிகாரத்தை இழந்தவர்களை ஈர்க்கும் காந்தமாக பாஜக திகழ்கிறது. ஏனென்றால், அதிகாரத்தின் பலன்களும் ஆதாயங்களும் அங்குதான் கிடைக்கின்றன. ஆட்சியை இழந்த கட்சியின் நிர்வாகிகளை இழுக்கும் முதல் ஆயுதம், ஊழல் குற்றச்சாட்டுகள்தான், இது சுமத்தப்பட்டதும், ஒருவழிப் பாதையாக மாறி வேறு வழியின்றி பாஜக பக்கம் பெரும்பாலும் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஒரு கட்சியை பிளக்கும் திட்டத்துடன் பாஜக களமிறங்கிவிட்டால், ஒரு கட்சியில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்களை ஈர்த்து கச்சிதமாக திட்டங்களை செயல்படுத்துகிறது. அவர்களை மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை வெளியேற்றி, அவர்களை தாங்களே உண்மையான கட்சி என்று உரிமை கோரி கட்சியை உடைப்பதை உத்தியாக வைத்துள்ளது. அதாவது, கட்சித் தாவல் தடைச் சட்டம் எதுவும் செய்யாத வகையில் காக்கப்படுகிறது.

காங்கிரஸின் கைவந்த கலை

உண்மையில் கட்சிகளை உடைக்கும் உத்தி, பாஜக ஆட்சிக்கு வந்த பின்புதான் தொடங்கியதா என்ற கேள்வி எழுகிறது.

அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக ஆட்சியில் இல்லாத நிலையில், சில கட்சிகள் பிளவுபடாமல், சிதைக்க முடியாமல் வலுவாக அரசியல் செய்வதும் எப்படி என்ற கேள்வி எழுகிறது.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த வேலையை காங்கிரஸ் கட்சி கச்சிதமாக ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும் செய்தது. கடந்த 1994-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்புக்கு முன்புவரை காங்கிரஸ், 356 பிரிவை கையில் எடுத்து விளையாடியது. தங்களுக்கு பிடிக்காத அரசு மாநிலத்தில் இருந்தால், 356 பிரிவை எடுத்து, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க தயங்கியதே இல்லை.

இரு கட்சிகளுமே எதிர்க்கட்சிகளை சிதைக்கும் வேலையை தங்களின் காலத்தில் செய்தாலும், இதை பாஜக மிகக் கச்சிதமாக தொழில்முறையாகச் செய்கிறது.

ஏன் சில கட்சிகள் உடைபடுவதில்லை?

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், இப்போது பாஜகவுக்கும் கட்சி மாறி, கட்சிகளை உடைக்கும் நிர்வாகிகள், சில கட்சிகளை மட்டும் உடைக்க முயன்றாலும் அது வெற்றிபெறவில்லை. அவ்வாறு நேர்ந்தாலும் சிறிய அதிர்வு ஏற்பட்டு மீண்டும் இயல்புக்கு அந்தக் கட்சி வந்துவிடுகிறது.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள், திமுக, அதிமுக ஆகியவை பாஜக, காங்கிரஸின் திட்டங்களுக்கு பலியாகாமல் தப்பித்து வருகின்றன.

திமுக, அதிமுக...

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பெரிதாக உடைபடாமலேயே அரசியலில் தங்களுக்கென இடத்தை தக்கவைத்து வருகின்றன. திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோதும், திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ தொடங்கியபோதும் பெரிதாக திமுகவுக்கு பாதிப்பு வந்துவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டபோதும் பெரிதாக பாதிப்பு அந்தக் கட்சிக்கு வரவில்லை. பல நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்ஏல்ஏக்கள், இரு கட்சிகளில் இருந்தும் தத்தம் இடம் மாறினாலும் இரு கட்சிகளும் சிதைந்துவிடவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இடதுசாரிகளின் பிடிப்பு

இடதுசாரிகள் தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்தாலும், புரட்சிகர சோசலிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனின் என செயல்பட்டாலும் இடதுசாரிகள் ஒரே அணியாக ஒருங்கிணைந்து நின்றனர். இதற்கு முக்கியக் காரணம், கொள்கை, சித்தாந்தங்கள் மீதான உறுதியான பிடிப்புதான் அவர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. இந்தியாவில், இன்று இடதுசாரிகள் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத சூழலிலும் கூட யாரும் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்துக்கூடப் பார்ப்பதில்லை.

அசராத பாஜக

2014-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மக்களவையில் 4 எம்பிக்களாக சுருங்கி இருந்தது. 1984-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக 2 இடங்களில்தான் வென்றது என்றாலும், இரு கட்சிகளின் எம்.பி.க்களுமே ஒற்றுமையை பாதுகாத்தனர். பாஜக கட்சி தொடங்கி 75 ஆண்டுகளாகியும் (பாரதிய ஜனசங், பிஜேஎஸ்) 2014-ம் ஆண்டிலிருந்துதான் பாஜக ஆட்சியில் தொடர்ந்து இருக்கிறது.

பல்வேறு இக்கட்டான காலகட்டங்களிலும், பாஜகவில் பிளவு இல்லை. எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் பெரிதாக யாரும் அணி மாறவில்லை. குஜராத்தில் பாஜகவின் சங்கர்சிங் வகேலா மட்டும் கட்சி மாறினாலும், அது பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி பலமுறை உடைக்கப்பட்டது, பலரும் இங்கிருந்து பாஜகவுக்கு மாறியுள்ளனர்.

இதற்கு முன் உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங், உமா பாரதி, கர்நாடகத்தில் பிஎஸ் எடியூரப்பா ஆகியோர் பாஜக தலைமைக்கு மிரட்டல் விடுத்தாலும் பெரிதாக கட்சியை பாதிக்கவில்லை, மீண்டும் இணைந்துவிட்டனர்.

குஜராத்தில் வகேலா மட்டும் 47 எம்எல்களுடன் போர்க்கொடி தூக்கி, கேசுபாய் படேல், நரேந்திர மோடிக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் காங்கிரஸில் தனது சகாக்களுடன் இணைந்தார் வகேலா. அதன்பின் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து காங்கிரஸ் நன்றிக்கடன் தீர்த்தது.

குறிப்பாக பாஜக, இடதுசாரிகள் வலுவான மற்றும் ஆழமான கொள்கை, சித்தாந்தங்களை வைத்திருப்பதால் தேர்தல் தோல்வி பொருட்டாக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை. தொண்டர்களையும், நிர்வாகிகளையும், வாக்காளர்களையும், கொள்கைகளும், சித்தாந்தங்களும்தான் ஒருங்கிணைத்து வைத்திருக்கின்றன.

அடிப்படைக் கட்டமைப்பு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே அரசியல் ஒழுக்கம் ஆகியவை நீண்ட காலத்தில் கட்சியை பிணைப்புடன் வைத்திருந்து, பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். இதுபோன்ற அம்சங்கள் இருக்கும்பட்சத்தில் கட்சி உடைபடுவது கடினம். நீண்டகால இயக்கக் கட்டமைப்புக்கே முன்னுரிமை அளிக்கின்றன.

வலுவான உட்கட்சி ஜனநாயக நடைமுறைகள், தலைமையின் வழிகாட்டல், உத்தரவுக்கு மதித்து நடத்தல், மையப்படுத்தப்பட்ட தலைமை ஆகியவை கட்சி அமைப்பு சிதறிப் பிரிவதைத் தடுக்கின்றன.

சமாஜ்வாதியின் கட்டுக்கோப்பு

அதேபோல உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவால் தொடங்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியும் இதுவரை பாஜக, காங்கிரஸ் கட்சியால் பெரிதாக உடைக்கப்படவில்லை, அந்தத் திட்டமும் நிறைவேறவில்லை. உ.பி.யில், ஓபிசி - முஸ்லிம் வாக்குகள் பெருமளவை சமாஜ்வாதி கையில் வைத்திருப்பதாலும், தெளிவான கொள்கைகள், சித்தாந்தம் வைத்திருப்பதாலும், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கை குறையாமல் கட்சி நடத்தும்போது அந்தக் கட்சியை வலுவாக வைத்திருக்கிறது.

காங்கிரஸ் சிந்திக்க வேண்டிய நேரம்

கட்சி உடைப்பட்டதில், சிதைந்ததில் பெரிதாக பாதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிதான் இந்த விவகாரத்தில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், கேரளாவில் பல சிறு கட்சிகளான மாணி காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் போன்ற பல பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவையே. இந்தக் கட்சியின் தலைவர்கள் காங்கிரஸில் தொடர்ந்து இருந்தால், அதிகாரத்தை கைப்பற்ற நீண்டகாலமாகும். சில நேரங்களில் தோற்றுப் போகலாம் என்பதால், வாய்ப்புகளைத் தேடி அலைந்தபோது, பிரிவினையை கையில் எடுத்து அதிகாரத்தை கைப்பற்றினர்.

‘ஏன் கட்சிகள் உடைகின்றன?’ என்ற இங்கே கேள்வி எழுகிறது. அதற்கான காரணங்கள்...

அதிகாரம், ஆதரவைச் சார்ந்திருத்தல்:

ஆட்சி அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றை அனுபவித்து இருந்த நிர்வாகிகள், தங்களின் கட்சி அதிகாரத்துக்கு நீண்ட காலமாக ஆட்சிக்கு வர இயலாத நிலையில் மாற்று இடம் நோக்கி நகர்கிறார்கள். அரசாங்க ஒப்பந்தங்கள், அமைச்சர் பதவிகள் மற்றும் உள்ளூர் செல்வாக்கு போன்றவை வற்றிப் போகும்போது, கட்சியை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் ஊக்கம், சித்தாந்தங்கள், கொள்கைகளுக்கு மதிப்பு குறைந்துவிடுகிறது.

அரசியல் பிழைப்பு, கட்சி தாவல்:

அரசியலில் உயிர்ப்பித்து இருந்தால்தான் மதிப்பு என்பதால், கட்சித் தாவல் நிர்வாகிகள் பலருக்கும் அது தவறாகத் தெரியவில்லை. இதற்குமு ன் வாழ்வளித்த கட்சியின் தலைமை, கொண்ட கொள்கை, காற்றில் பறக்கவிடப்பட்டு பிழைப்புக்கான உந்துதலை நோக்கி நகர்கிறார்கள். சில நிர்வாகிகள், தங்கள் அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்கவும், அல்லது தங்கள் தொகுதிகளுக்கு அரசு நிதியை உறுதிசெய்ய ஆளும் கட்சிக்குத் தாவுகின்றனர்.

ஆளுமை இன்மை:

ஓர் அரசியல் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்த தலைமைக்கு ஆளுமை மிக முக்கியம். ஆளுமை கொண்ட தலைவரால்தான் எத்தகைய கடின சூழலிலும் கட்சியை கரை சேர்க்க முடியும். இன்று ஸ்திரமாக இருக்கும் பல கட்சிகளிலும் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்துள்ளனர், இருக்கிறார்கள். அவர்களால்தான் கட்சி சிதைக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாஜகவில் முன்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, இப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுகவில் கருணாநிதி, இப்போது மு.க.ஸ்டாலின், அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமை முக்கியக் காரணமாகும்.

கவர்ச்சிகரமான தலைவர் அல்லது அவர்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட கட்சிகள், அந்தத் தலைவர் தேர்தலில் தோற்றாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது மறைந்தாலோ கடுமையான சட்டரீதியான அல்லது அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டாலோ விரைவாகச் சிதைந்துவிடும். ஒரு தலைவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் வந்தாலும், அது விதிவிலக்காகவே இருக்கிறது.

வலுவில்லாத கொள்கை, சித்தாந்தம்:

கட்சியிலிருந்து நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் கூட்டாக வெளியேறுவதற்கு கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வலுவாக அவர்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பதும் வலுவாக இருக்காததும் காரணமாகும்.

அடித்தளம் வலுவாக அமைந்து, சித்தாந்தங்கள், கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கும் நிர்வாகிகள், கட்சிக்கு எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தபோதிலும் விலகமாட்டார்கள். பொருளாதார பலன்கள், அதிகார பலன்கள் கிடைக்காத நிலையிலும் கொள்கைக்கும், சித்தாந்தத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பர். அதை எதிர்பார்த்து இருக்கும் நிர்வாகிகள், அது கிடைக்காத பட்சத்தில் கொள்கையும், சித்தாந்தமும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

SCROLL FOR NEXT