கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர்

 
இந்தியா

திருவனந்தபுரத்தில் பாஜக எழுச்சி சாத்தியமானது எப்படி?

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - ஓர் அலசல்

பாரதி ஆனந்த்

“திருவனந்தபுரத்துக்கு நன்றி. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - என்டிஏ பெற்ற இந்த வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை. கேரள மக்கள் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் மீது சலிப்படைந்துவிட்டனர். மாநிலத்தில் நல்லாட்சி வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் ஒரு வளர்ந்த கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே தேர்வாக என்டிஏ-வை மக்கள் பார்க்கிறார்கள்.

மக்களிடையே பணியாற்றிய, கடினமாக உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றி. இதுவே திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஓர் அற்புதமான முடிவை உறுதி செய்துள்ளது. தொண்டர்களின் உழைப்பே இன்றைய இந்த முடிவு நிஜமாகியதை உறுதி செய்தது. எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” - இது கேரள உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 101 வார்டுகளில் 50 வார்டுகளைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததை அடுத்து, பிரதமர் மோடி பகிர்ந்த எக்ஸ் பதிவு.

கேரளாவில் 6 மாநகராட்சிகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 152 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 941 கிராமப் பஞ்சாயத்துகளில் இரண்டு கட்டங்களாக டி.9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவு கடந்த சனிக்கிழமை (டிச.13) வெளியானது.

பேசுபொருளான திருவனந்தபுரம்!

கேரள உள்ளாட்சித் தேர்தலில், யுடிஎஃப் கொல்லம், கொச்சி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகள், 7 மாவட்டப் பஞ்சாயத்துகள், 54 நகராட்சிகள், 79 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 505 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.   

ஆளும் எல்டிஎஃப் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2020 தேர்தலில் எல்டிஎஃப் 5 மாநகராட்சிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுதவிர 7 மாவட்டப் பஞ்சாயத்துகள், 28 நகராட்சிகள், 63 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 340 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக தலைமையிலான என்டிஏ திருவனந்தபுரம் மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் 26 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதில், திருவனந்தபுரம் வெற்றி கேரளாவைத் தாண்டி பேசு பொருளாகியுள்ளது. பாஜகவும் அதை ஏதோ மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு நிகராகக் கொண்டாடி சிலாகிக்கிறது.

காரணம், கடந்த 45 ஆண்​டு​களாக திரு​வனந்​த​புரம் மாநகராட்சி மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணி​யின் கோட்​டை​யாக இருந்​தது. முதல் ​முறை​யாக இந்த மாநக​ராட்​சியை பாஜக கைப்​பற்றி புதிய வரலாறு படைத்​திருக்கிறது. இதை கேரளாவில் அடுத்தடுத்த வெற்றிக்கான கணக்கின் தொடக்கமாக பாஜக பார்க்கிறது, அடையாளப்படுத்துகிறது, நிறுவுகிறது.

வரலாற்று வெற்றி சாத்தியமானது எப்படி? 

கேரள உள்​ளாட்​சித் தேர்​தலில் ஆளும் மார்க்​சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்​னடைவு ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தலைமையி​லான கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. அதே​போல் பாஜக தலை​மையி​லான என்டிஏ கூட்​ட​ணி​யும் கணிச​மான இடங்களைக் கைப்​பற்றி உள்​ளது.

குறிப்​பாக, திரு​வனந்​த​புரம் மாநக​ராட்​சி​யில் 101 வார்​டு​கள் உள்​ளன. இதில் 50 வார்​டு​களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்​றனர். மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29, காங்​கிரஸ் கூட்​ட​ணிக்கு 19 வார்டுகள் கிடைத்​தன. 2 வார்​டு​களில் சுயேச்​சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.

திருவனந்தபுரத்தில் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மக்களுக்குப் பாந்தமான வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பிரச்சாரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 34 வார்டுகளில் வென்ற பாஜக, இத்தேர்தலில் 50 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. தனது பிரச்சாரத்தில் பாஜக யுடிஎஃப், எல்டிஎஃப் கூட்டணிகள் ஊழலின் கூடாரம் என்று விமர்சிப்பதை மிக முக்கிய அஸ்திரமாகக் கையில் எடுத்திருந்தது.

உள்ளாட்சி அமைப்புகளிடம் சேவை குறைபாடு மற்றும் செயல்திறன் குறைபாட்டை மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தது. அதேவேளையில் முன்பு எப்போதும் எந்தத் தேர்தலிலும் பேசும் ‘லவ் ஜிஹாத்’ போன்ற பிரித்தாளும் அரசியல் பிரச்சாரங்களை முழுக்க தவிர்த்தது. இவை திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதை விடவும் ஒரு நுணுக்கமான பிரச்சார உத்தியும் கவனிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் கவனம் செலுத்தியது. இந்தப் பகுதிகள் இந்துக்கள் வாக்கு பலம் கொண்டது. தனது பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு என்று திட்டமிட்டு செயல்படுத்தினாலும் கூட அதன் வீச்சு, கவனக் குவிப்பு இந்துக்கள் வாக்கு பலம் கொண்ட தெற்கு, மத்திய கேரளாவில் அதிகமாக இருந்துள்ளது. 

பாஜகவின் உத்திகள் இந்து வாக்குகள் அதிகமுள்ள திருவனந்தபுரத்தில் ஒர்க் அவுட் ஆனது போல் முழுவீச்சில் பலிக்காவிட்டாலும் கூட பாலக்காடு, திருச்சூரிலும் கணிசமாக நகர்ப்புற இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சூரில் இருந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் உண்மையில் பிரதமர் சொல்வது போல் எல்டிஎஃப், யுடிஎஃப் மேல் மக்கள் சலிப்படைந்துவிட்டனரோ என்பது சரிதானோ என்ற கருத்தை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. 

எங்கு சறுக்கியது எல்டிஎஃப்?

ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சிபிஎம் ஒருவித மிதமான இந்துத்துவத்தை கையில் எடுத்திருப்பதாக தேர்தலுக்கு முன்னரே விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதை உறுதி செய்யும்படி, வடக்கு கேரளத்தில் குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற பகுதிகளில் சிபிஎம் முஸ்லிம்களின் அதிருப்தியை அதிகப்படியாகவே அறுவடை செய்து வைத்திருந்தது எனலாம்.

வடக்குப் பகுதி இந்துக்கள் அவுட்ரைட்டாக பாஜக பக்கம் சாய்ந்துவிட, அங்கிருந்த முஸ்லிம் வாக்குகள் யுடிஎஃப்-க்கா? இல்லை, தங்களுக்கா என்ற சந்தேகத்தில் தான் தேர்தலில் களம் கண்டது ஆளும் கூட்டணி. எதிர்பார்க்கப்பட்டது போல் மலப்புரத்தில் 12 நகராட்சிகளில் 11-ஐ யுடிஎஃப் தன் வசமாக்கியது. 

இடதுசாரிகள் மீதிருந்த மதச்சார்பின்மை அடையாளம் சரிந்தது தான் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன் யுடிஎஃப் முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்தபோது, ‘லீக் அலயன்ஸ்’ என்று விமர்சித்தது, முஸ்லிம்களை வெகுவாக சங்கடப்படுத்தியிருந்தது.

அதேபோல் முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்த பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஆரம்பத்தில் அரசு ஏற்றுக் கொண்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் குளோபல் ஐயப்பா சங்கமம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் பேக் ஃபயர் ஆகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடு ஆகியவற்றில் இருந்து தங்கம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சங்கமம் முன்னெடுப்பு ஒரு சந்தர்ப்பவாத அரசியலாகப் பார்க்கப்பட்டது. முஸ்லிம் வாக்காளர்கள் நம்பகத்தன்மைவாய்ந்த மதச்சார்பற்ற கட்சி என்று அலசியபோது அவர்களுக்கு நல்ல மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முன்நின்றது எனலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

எச்சரிக்கும் அரசியல் விமர்சகர்கள்:

இடதுசாரிகளின் தேசிய அரசியலைக் கூர்ந்து நோக்கும் அரசியல் பார்வையாளர்கள், கேரளாவை இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதுகின்றனர். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எல்டிஎஃப் தோல்வியைத் தழுவுமானால், 1970-க்குப் பின்னர் இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த மாநிலத்திலுமே ஆட்சியில் இல்லை என்ற நிலை திரும்பும் என்று கவலை தெரிவிக்கின்றனர். இது அமைப்பு ரீதியாக இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய அடியாக அவர்கள் பார்க்கிறார்கள்.  

இந்தத் தேர்தலில் யுடிஎஃப்-ன் அபார வெற்றி, என்டிஏ-வின் எழுச்சி பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “மாநிலம் முழுவதுமே காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் எழுச்சி கண்டுள்ளது. இது காங்கிரஸ் மீண்டெழுந்த தருணமாகக் கொள்ளலாம். ஆனால், அதேவேளையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2020-ல் எப்படி தனது வாக்கு வங்கியை முன்பைவிட வலுப்படுத்தியிருந்ததோ, அதேபோல் இப்போது 2020-ஐ விட வலுப்படுத்தியுள்ளது. இந்த வாக்கு வங்கி வளர்ச்சியை நிதானமான குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று கொள்ளலாம். இந்து பெரும்பாண்மை கொண்ட தெற்கு, மத்திய கேரளா என்று உத்தியை கூர்மையாக்கி பணியாற்றியது, ப்ரேக்த்ரூ வெற்றிகளையும், ஆச்சர்யப்பட வைக்கும் வாக்கு வங்கி வளர்ச்சியையும் கொடுத்துள்ளது” என்கின்றனர்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அப்படியே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடித்தளமாகக் கருதி இப்போதிருந்தே உழைத்தால் கேரள அடுத்த சில ஆண்டுகளுக்கு பாஜக எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக கிராமப்புற பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை யுடிஎஃப் 505, எல்டிஎஃப் 340, என்டிஏ 26 என்பது பாஜகவுக்கு ‘மைல்ஸ் டூ கோ’ நிலைமை தான் என்றும் கேரள மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கணிக்கின்றனர். அதேவேளையில், எந்தச் சூழலிலும் பாஜகவின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அது கணக்கைத் தொடங்கிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை எனக் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT