இந்தியா

“டெல்லியில் மீண்டும் தேர்தல் நடந்து பாஜக 10+ இடங்களில் வென்றால்...” - மோடிக்கு கேஜ்ரிவால் சவால்

ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் ஆவேசம்

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்தார். “இப்போது தேர்தல் நடந்து, அதில் பாஜக 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன்” என்று கேஜ்ரிவால் கூறினார்.

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ-க்கு கடுமையான கண்டனம் தெரிவித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அரசு தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

          

இதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், “பாஜக ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் அதிகார வெறியின் மிகப் பெரிய விளைவை டெல்லியின் மூன்று கோடி மக்களும் சுமந்துள்ளனர். இதனை நீங்கள் டெல்லி மக்களிடம் சென்று கேளுங்கள்.

இன்று நான் மோடிக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். பாஜக 10-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால், நான் அரசியலை விட்டே விலகுவேன். டெல்லி மக்கள் உங்களைப் பார்த்து சலித்துப் போயுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியை டெல்லியில் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற பாஜகவால் தீட்டப்பட்ட, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் சதிதான் இந்த வழக்கு.

அதிகாரத்துக்காக யாரும் நாட்டையும், அரசியலமைப்பையும் இதுபோல வைத்து விளையாடக் கூடாது. அந்த வழக்கில் எந்த உண்மையும் இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே ஜோடிக்கப்பட்ட ஒன்று. இதில் ஏதேனும் உண்மை இருந்தால், விசாரணை பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் நீடிக்கும். ஏராளமான சாட்சிகள் அழைக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும். இது ஓர் அற்பமான வழக்கு, மிகவும் போலியானது, மிகவும் பயனற்றது, மிகவும் தவறானது என்று நீதிமன்றம் கூறியது. நான் இதைச் சொல்லவில்லை. இது நீதிமன்றத்தின் வார்த்தைகள்.

இந்த முழு சதியும் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரால் செய்யப்பட்டது. இன்று அவர்கள் இருவரும் முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அவர்கள் ஒன்றாக இந்த சதியை செய்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT