பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்
கொல்கத்தா: இந்துக்கள் பூஜை பந்தல் அமைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் குற்றம் சாட்டினார்.
பாஜகவின் புதிய தலைவர் நிதின் நபின் நேற்று மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோயிலில் வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் இந்துக்கள் பூஜை பந்தல் அமைக்க உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில் தொழுகை நடத்த அரசால் அனுமதி வழங்கப்படுகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. மேற்கு வங்கத்தை பொன்மயமான மற்றும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற நாங்கள் காளி அன்னையின் ஆசியை நாடியுள்ளோம்” என்றார்.
மம்தா பானர்ஜி பதிலடி: இதற்கிடையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வமான மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசுகையில் “வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என கவலை எழுந்துள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகளின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் மக்களின் அடையாளம் மற்றும் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
பாஜக, வங்காளிகளுக்கு எதிரான கட்சி. இன்று அவர்கள் வங்காளிகளின் வாக்குரிமையை பறிக்கின்றனர். நாளை தேசியக் குடியுரிமைப் பதிவேடு மூலம் நமது குடியுரிமையையே பறிப்பார்கள்” என்றார்