புதுடெல்லி: வரும் 2070-ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் மக்கள் தொகை தற்போதைய 79.4 சதவீதத்தில் இருந்து 75.8 சதவீதமாக குறையும் என்று சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“உலகில் உள்ள மதங்கள் எதிர்காலம்” என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் அண்மையில் விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 227 கோடியாக உள்ளது. முஸ்லிம்கள் மக்கள் தொகை 202 கோடி. 2035-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 257 கோடியாக அதிகரிக்கும்.
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 252 கோடியாக இருக்கும். இதன்மூலம் 2035-ல் உலகின் மிகப் பெரிய மதமாக, முஸ்லிம் மதம் உருவெடுக்கும். கிறிஸ்தவம் 2-வது இடத்துக்கு தள்ளப்படும். 2070-ல் முஸ்லிம்கள் மக்கள்தொகை 360 கோடியாக உயரும். கிறிஸ்தவர்கள் மக்கள்தொகை 300 கோடிக்கும் கீழாகவே இருக்கும்.
2020-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இந்துக்கள் மக்கள் தொகை 79.4 சதவீதமாக உள்ளது. வரும் 2070-ம் ஆண்டில் இந்துக்கள் மக்கள் தொகை 75.8 சதவீதமாகக் குறையும். இதே காலகட்டத்தில் முஸ்லிம்கள் மக்கள் தொகை 15.2 சதவீதத்தில் இருந்து 19.6 சதவீதமாக அதிகரிக்கும்.
இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை தற்போது 2.2 சதவீதமாக உள்ளது. வரும் 2070-ம் ஆண்டிலும் கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 2.2 சதவீதமாகவே நீடிக்கும்.
அமெரிக்காவில் தற்போது 40 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர். வரும் 2070-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரிக்கும்.
தற்போது உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. வரும் 2070-ம் ஆண்டில் இந்தோனேசியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முதலிடம் பிடிக்கும்.
மேலும் சர்வதேச அளவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்துக்கு வரும்.
சீன மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் கிடையாது என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் 200 கோடி பேர் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் கிடையாது என்று கூறுகின்றனர். உலக மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது. வரும் 2070-ம் ஆண்டில் இவர்கள் எண்ணிக்கை 17 சதவீதமாக மட்டுமே இருக்கும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.