குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. அங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன.
இதில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா (57), சபாநாயகர் விஸ்வஜித் டெய்மரி, எதிர்க்கட்சித் தலைவர் தேவ்விரத சைகியா உட்பட மொத்தம் 109 பேர் கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதற்கு முன்பு 7 பேர் என இதுவரை மொத்தம் 116 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜலுக்பரி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனக்கும் தனது மனைவி ரினிகு புயான் சர்மாவுக்கும் ரூ.35 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தனக்கு ரூ.2.36 கோடி மதிப்பிலான அசையும் சொத்து மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது தனக்கு ரூ.1.72 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோல பிரைடு ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் என்ற ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள தனது மனைவி ரினிகு புயானுக்கு ரூ.13.54 கோடி அசையும் சொத்தும் ரூ.19.25 கோடி அசையா சொத்தும் இருப்பதாக ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ.95 லட்சமும் தனது மனைவிக்கு ரூ.15.91 கோடியும் கடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.