இந்தியா

டெல்லியில் கனமழை: விமான நிலையத்தில் தேங்கிய தண்ணீரால் பயணிகள் அவதி

செய்திப்பிரிவு

புது டெல்லி: டெல்லியில் பெய்த கனமழையால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 3 மணி நேர மழைப்பொழிவு தரவுப்படி, பாலம் பகுதியில் 3.4 மி.மீ மழையும், நஜப்கர் பகுதியில் 0.5 மி.மீ மழையும் பதிவானது. மற்ற பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் மழை பதிவாகவில்லை.

பிற்பகல் 2.15 மணி முதல் மாலை 4.15 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டது.

அடுத்த 3 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் 50-100 மி.மீ அளவிலான கனமழையும் பெய்யும் என்றும், அத்துடன் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ (அதிகபட்சமாக 60 கி.மீ) வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

வெள்ளம் வடியாததால் அரை மணி நேரமாக காத்திருப்பதாகவும், இதுபோன்ற காட்சியைத் தான் பார்த்ததே இல்லை என்றும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். பயணிகள் தங்கள் பேன்ட்டை மடித்துக்கொண்டு லக்கேஜ் வண்டிகளுடன் நீரில் நடந்து சென்றனர். டெல்லியின் பிற இடங்களிலும் இதேபோல வெள்ளம் தேங்கியது.

SCROLL FOR NEXT