இந்தியா

க‌ர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மிகவும் தாமதமாக தொடங்கியது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் வறண்டு காணப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் கர்நாடகாவில் ஷிமோகா, ஹாசன், சிக்கமகளூரு, உடுப்பி, உத்தர கன்னடா உள்ளிட்ட மலநாடு பகுதியை சேர்ந்த‌ மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, துங்க பத்ரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

குடகு மாவட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக் காவிரி, பாக மண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 3 நாட்களாக‌ கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை 165 மி.மீ மழை பதிவானது. நேற்று முன்தினம் தொடங்கி புதன்கிழமை இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மடிகேரி வட்டத்தில் உள்ள பெங்கூரு கிராமத்தில் 211.5 மி.மீ மழை பதிவானது. இரவும் பகலும் விடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் காவிரி ஆற்றிலும் அதன் துணை நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

SCROLL FOR NEXT