புதுடெல்லி: மக்களவையில் நேற்று வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீது காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
நீட் வினாத்தாள் கசிவு பிரச்சினைக்கு தீர்வு காண புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். இதன்படி மக்களவையில் நேற்று முன்தினம் பொதுத்தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் அமளியில் மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. நாடாளுமன்ற பேரணியின்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது மசோதா மீதான விவாதம் தொடங்கியது.
அப்போது அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பலமுறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. 2009-ல் ரயில்வே வாரிய தேர்வு, 2011-ல் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு, 2012-ல் டெல்லி எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளன. அப்போது தேசிய அளவிலான தேர்வு ஆணையத்தை அமைக்க பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-ல் தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
அகிலேஷ் யாதவ் பேசும் போது, “ஒரு பிரதானை நீக்கிவிட்டு, பிரதமரை காப்பாற்றி விட்டீர்கள்” என்றார்.
பிரியங்கா காந்தி விமர்சனம்:
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பேசியதாவது: “நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது ஏன் ? ஏகே 47 துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன்?
கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களின் விடுதலையை பிரகலாத் ஜோஷி வரவேற்றார். தற்போது மத்திய கல்வி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான மாணவிகளுக்கு மத்திய அரசு என்ன சொல்ல விரும்புகிறது ? புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும். வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க மத்திய அரசு சார்பில் உயர்நிலைக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் கோமியம் நிபுணர் (சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி), ஐடி நிறுவன உரிமையாளர் (நந்தன் நிலகேனி), உளவுத் துறை முன்னாள் இயக்குநர் (தபன் டேகா) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது வேடிக்கையாக இருக்கிறது” இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 2025-ம் ஆண்டு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, “எனது தந்தை காய்ச்சலில் இருந்தபோது சன்னியாசி ஒருவர் வந்தார். கோமியம் குடிக்கச் சொன்னார். எனது தந்தை கோமியம் குடித்ததும் 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமியத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன” என்று தெரிவித்தார். இதை மறைமுகமாக சுட்டிக்காட்டி சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை, கோமியம் நிபுணர் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடர்பான பிரியங்காவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்தார். “ஜோஷி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவையில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இந்த மசோதா தொடர்பான விவாதம் நேற்று இரவு வரை நீடித்தது.