இந்தியா

ம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? - ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்​திய பிரதேச மாநிலத்​தின் தார் நகரில் 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கட்​டிடம் உள்​ளது. இந்த வளாகத்​தில் இருந்த கோயிலை இடித்​து​விட்டு கட்​டிடம் கட்டப்பட்டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

எனவே, போஜ்​சாலாவை கோயி​லாக மாற்ற இந்​துக்​கள் வலியுறுத்தி வரு​கின்​றனர். ஆனால், உள்ளே இருக்​கும் மவுலானா கமாலுதீன் மசூதி அங்​கு​தான் இருக்க வேண்​டும் என்று முஸ்லிம்கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இந்த சர்ச்சை தொடர்பாக ம.பி. உயர் நீதி​மன்​றம் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் பல்​வேறு வழக்​கு​கள் உள்​ளன. இதில் ஒரு வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி, ம.பி. உயர் நீதி​மன்​றம் விசா​ரித்து வரு​கிறது.

          

இந்த வழக்கு நேற்று முன்​தினம் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்​கிய அமர்​வு, ”போஜ்சாலா கட்​டிடம் தொடர்​பாக சர்ச்​சை நில​வுவ​தால், அங்கு ஏப்ரல் 2ம் தேதிக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு செய்ய விரும்​பு​கிறோம்” என்று தெரிவித்தனர்.

தற்​போது போஜ்​சாலா கட்​டிடம் மத்​திய அரசின் தொல்​லியல் துறை​யின் (ஏஎஸ்ஐ) கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. போஜ்​சாலா கட்டிடத்தில் கோயில், மசூதி இருப்​ப​தால் கடந்த 2003ம் ஆண்டு ஏப்​ரல் 7ம் தேதி ஏஎஸ்ஐ பிறப்பித்த உத்​தர​வில், ”போஜ்சாலாவுக்குள் இந்​துக்​கள் செவ்​வாய்க் ​கிழமை தோறும் வழிபடலாம். முஸ்​லிம்​கள் வெள்​ளிக்​ கிழமை சிறப்​புத் தொழுகை நடத்​தலாம்” என கூறப்​பட்​டது.

முன்​ன​தாக, உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி ஏஎஸ்ஐ சார்​பில் அறிவியல் ​பூர்வ ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது. சுமார் 2,000 பக்க அறிக்​கை​யில், ”தார் பகு​தியை ஆண்ட பர்​மார மன்​னர்​களின் காலத்​தைச் சேர்ந்த ஒரு பிரம்​மாண்​ட​மான கட்டிடம் ​தான் இந்த போஜ்​சாலா. தற்​போதைய மசூதி கட்டப்படுவதற்கு முன்​னரே அங்கு கோயில் அமைந்​திருந்த மிச்சங்​கள் (சிற்ப துண்டுகள்) உள்​ளன. அதன் இடி​பாடு​களை பயன்​படுத்தி இந்த போஜ்​சாலா 11-ம் நூற்​றாண்​டில் கட்டப்பட்டுள்ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதை மறுக்​காத முஸ்​லிம் தரப்பு மனு​தா​ரர் மவுலானா கமாலுதீன் நலச் சங்​கத்​தினர், நாடு சுதந்​திரம் அடைந்த போது இருந்த நிலையை பாது​காக்க வேண்​டும் என வலி​யுறுத்​துகின்​றனர். அத்துடன் பிரதமர் பி.​வி.நரசிம்ம ராவ் ஆட்​சி​யில் கொண்டு வரப்பட்ட ‘வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்பு சட்​டம்​ 1991’-ஐ பின்பற்​ற வேண்​டும்​ என்​று கூறுகின்​றனர்​.

SCROLL FOR NEXT