பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளை 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூரு, கார்வார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மதம், மொழி, சாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெறுப்பு பேச்சு காரணமாக அவ்வப்போது கலவரங்கள் நிகழ்ந்தன. இதனால் கர்நாடக அரசு வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர முடிவெடுத்தது. அதன்படி வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் தடுப்பு மசோதாவுக்கு கடந்த 4-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கடந்த 10-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்தின் மூலம் காங்கிரஸ் அரசு பாஜகவினரையும் இந்துத்துவ அமைப்பினரையும் ஒடுக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின்போது நிறைவேற்றப்பட்டது. அப்போது பாஜக எம்எல்ஏக்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இந்த மசோதா வெற்றிகரமான நிறைவேற்றப்பட்டதாக பேரவைத்தலைவர் யு.டி.காதர் அறிவித்தார்.
மசோதாவின் அம்சங்கள் இந்த மசோதாவின்படி மதம், சாதி, மொழி, இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு எதிராக செய்யப்படும் வெறுப்புரை, சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தினால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
வெறுப்பு பேச்சாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் தகவல், படம், வீடியோ, கணினி மென்பொருள், மைக்ரோ ஃபிலிம் போன்ற வடிவங்களில் இடம்பெற்றாலும் வெறுப்புச் செயல்களாகக் கருதப்படும்.
இத்தகைய குற்றத்தை செய்தால், 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகைய குற்றங்கள் ஜாமினில் வெளிவர முடியாத குற்றங்களாக கருதப்படும் என அரசு அறிவித்துள்ளது.