புதுடெல்லி: பருவமழைக் காலத்தில் பரவக்கூடிய எச்1என்1 இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு (ஸ்வைன் ஃப்ளூ - பன்றிக்காய்ச்சல்) இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவரும் சூழலில், பொது மக்கள் தாங்களாகவே ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும், தீவிர அறிகுறிகள் தென்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளையில் இப்போது பரவும் தொற்று வழக்கமான வைரஸ் தான் என்றும் இது மரபணு உருமாற்றம் கொண்டதல்ல என்பதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
எச்1என்1 இன்ஃப்ளூயன்சா பாதிப்பு டெல்லியில் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஐஎம்ஏ கூறுகிறது. டெல்லியில் மட்டும் 1770 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்குவங்கத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறும் ஐஎம்ஏ, அதன் நிமித்தமாகவே பொது மக்களுக்கு இந்த அறிவுரையை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது பரவிவரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் எச்1என்1 வகையைச் சேர்ந்ததுதான், அதில் புதிதாக எந்த மரபணு மாற்றமும் ஏற்படவில்லை என்று உறுதி செய்துள்ள தகவலையும் ஐஎம்ஏ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றப்படாமல் தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எச்1என்1 வைரஸ் தொற்று என்பதால் மக்கள் தாங்களாகவே அஸித்ரோமைசின், அமாக்சிலின் - க்ளாவுலனேட், செஃபிக்ஸைம் அல்லது பிற ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். மருந்துகங்களில் தாமாகவே இதுபோன்ற மருந்துகளை வாங்கி உட்கொண்டால் அவை உடலை பாதுகாக்கும் மைக்ரோபயோம்களை அழித்து, நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்பு (Antimicrobial resistance - AMR) நிலையை உருவாக்கிவிடும்.
அதேபோல், ஆண்ட்டி வைரல் மருந்துகளையும் தாமாக வாங்கி உட்கொள்ளக் கூடாது. நோயின் தீவிரத்தை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று ஐஎம்ஏ வலியுறுத்தியுள்ளது.
எச்1என்1 பாதிப்பு அறிகுறிகள்:
காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற லேசான அறிகுறிகளும், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், சளியில் ரத்தம், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் போன்ற தீவிர அறிகுறிகள் எச்1என்1 பாதித்தோருக்கு ஏற்படலாம்.
எச்1என்1 பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் முறைகள்:
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளிவிட்டு விலகி இருத்தல் பாதுகாப்பானது.வெதுவெதுப்பான நீரில் உப்பு கலண்டு வாய் கொப்பளித்தல், வெதுவெதுப்பான நீரை குடித்தலை பின்பற்றலாம்.
பேருந்து, ரயில்களில் பயணிப்பவர்கள் மற்றும் திரையரங்கம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் தற்காப்பு நடவடிக்கையாக முகக் கவசங்கங்களை (மாஸ்க்) அணிந்து செல்லலாம்.
கைகளை கழுவினாலே தடுக்கலாம்:
எச்1என்1 பாதிப்பை 80 சதவீதம் கைகளை சுத்தமாக கழுவாததால் தான் பரவுகிறது. எனவே, பொது இடங்களுக்குச் சென்று திரும்பும்போது 20 வினாடிகள் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவுதலையும் பின்பற்றலாம். அல்லது ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட கிருமி நாசினிகளை கைகள் சுத்தப்படுத்த பயன்படுத்தலாம்.
பொது மக்களுக்கான இந்த வழிகாட்டுதல்களை ஐஎம்ஏ தேசியத் தலைவர் அனில்குமார் நாயக் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது.