விதி கல்பேஷ் மேகா
புதுடெல்லி: போதை கடத்தல் ஆசாமியால் கொல்லப்பட்ட மகள் உடலை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று குஜராத்தில் உள்ள தந்தை கனடா அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் பகுதியைச் சேர்ந்தவர் விதி கல்பேஷ் மேகா, வயது 22. கடந்த 4 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆசாமி, மேகாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இதுகுறித்து மேகாவின் தந்தை நேற்று கூறியதாவது: கனடாவின் நியாகரா பிராந்தியத்தின் செயின்ட் கேத்ரீன்ஸ் பகுதியில் என் மகள் மேகாவை கடந்த 15-ம் தேதி, கடத்தல் கும்பல் ஆசாமி கொலை செய்துள்ளார். ஆனால், 10 நாட்கள் கழித்துதான் எனக்கு தகவல் அனுப்பினார்கள். பணம் கேட்டு மிரட்டிய போது என் மகள் தர மறுத்திருக்கிறார். அதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி, மகளை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
என் மகளுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். எனவே, அவருடைய உடலை இந்தியாவுக்கு விரைந்து அனுப்பி வைக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போர்சாத் பாஜக எம்எல்ஏ ராமன்பாய் சோலங்கி என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். என் மகள் உடலை கனடாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக குஜராத் முதல்வர் அலுவலகத்திலும், பிரதமர் அலுவலகத்திலும் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேகாவைக் கொலை செய்த போதை ஆசாமி ஜோசுவா (40) என்பவரைப் போலீஸார் கடந்த 18-ம் தேதி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.