இந்தியா

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: அலுவலக உதவியாளர் வெற்றி; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தோல்வி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேநீர் விநியோகிக்கும் அலுவலக உதவியாளர் வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில், அதே கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தோல்வி அடைந்துள்ளார்.

குஜராத் நகராட்சித் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. சூரத், ராஜ்கோட், வதோதரா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 15 நகராட்சிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பிரதமர் நரேந்திர மோடியின் அலை இன்னும் வீசுகிறது.

இந்நிலையில், தனது அரசியல் பயணத்தை துவக்குவதற்காக ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ் நினாமோ என்பவர், ஆரவல்லி வட்டத்தில் போட்டியிட்டார். 2006-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ், தேர்தலில் போட்டியிடுவதற்காக பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றார். ஓத் எனும் நகராட்சியில் பாஜக இவரை வேட்பாளராக நிறுத்தியது. 'மோடி அலை' மற்றும் பாஜகவின் வலுவான தொண்டர்படை ஆகியவை இருந்தும் அவர் சுமார் 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மனோஜ் நினாமோவுக்கு இருந்த நிர்வாக அனுபவமும், அவரது பழங்குடியின அடையாளமும் அவரது வெற்றியை எளிதாக உறுதி செய்யும் என்று பாஜக நம்பியிருந்தது. அவரது தோல்வி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். ஓய்வுபெற்ற அதிகாரியான அவரது அனுபவத்தை அடிமட்ட நிர்வாகத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள பாஜக விரும்பியது.

எனினும், அரவல்லி மாவட்டப் பஞ்சாயத்து தேர்தல் முடிவு, ஒரு முக்கிய செய்தியை சொல்லி உள்ளது. ஒரு முன்னாள் மூத்த காவல் அதிகாரியின் 'உயர்நிலை' அரசியல் பிரவேசத்தை விட, ஏற்கனவே களத்தில் இருக்கும் உள்ளூர் தலைவர்களையே கிராமப்புற வாக்காளர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதே அந்த செய்தி.

பாஜக அலுவலக உதவியாளருக்கு வெற்றி:

குஜராத்தின் மெஹ்சானாவின் பாஜக அலுவலகத்தில் 28 வருடங்களாக தேநீர் விநியோகிக்கும் அலுவலக உதவியாளராக இருந்தவர் ரமேஷ்பாய் பில். இவர் மெஹ்சானாவின் 13-ஆவது வார்டில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 28 ஆண்டுகளாக பாஜக அலுவலகம் வருபவர்கள் அனைவருக்கும் இவர் தேநீர் பரிமாறி வந்துள்ளார். இவர் மீதும் நம்பிக்கை வைத்த பாஜக தலைமை, இவரை 13-வது வார்டு வேட்பாளராக அறிவித்தது.

கட்சி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், ரமேஷ்பாய் தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பிறகு, ரமேஷ்பாய் வெற்றிச் சின்னத்தைக் காட்டி, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT