“பயங்கரவாதத்துக்கு எதிராக ஷாங்காய் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” - ராஜ்நாத் சிங்

“பயங்கரவாதத்துக்கு எதிராக ஷாங்காய் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” - ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

பிஷ்கெக் (கிர்கிஸ்தான்): பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திகழ வேண்டும் என்றும், பயங்கரவாதம் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மனித குலத்தையே உலுக்கியது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அது வலியுறுத்தியது. பயங்கரவாத அமைப்புகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது.

பயங்கரவாத எதிர்ப்பு என்பது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஓர் அடிப்படைக் கொள்கை. பாதுகாப்பான புகலிடங்களை ஒழிப்பதற்கும், நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக விளங்கும், அரசால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் இந்த அமைப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். அமைதியை உறுதி செய்வதில் இந்தியா நேர்மறையான பங்கை வகிக்க உறுதிபூண்டுள்ளது.

உலகளாவிய மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய நெருக்கடி என்பது இல்லாத ஒரு ஒழுங்கைப் பற்றியது அல்ல.

மாறாக, நிறுவப்பட்ட விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு போக்கைப் பற்றியது. கருத்து வேறுபாடுகள் மோதலாக முற்றுவதை அனுமதிப்பதற்குப் பதில், நாடுகள் ஒருமித்த கருத்து மற்றும் ஒத்துழைப்பை நோக்கி நகர வேண்டும்.

உலக மக்கள் தொகையில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு, பிராந்திய மற்றும் உலக அமைதிக்குப் பங்களிக்கும் பொறுப்பு உள்ளது. உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கை, பரஸ்பர புரிதல் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும்.

வசுதைவ குடும்பகம் அல்லது உலகம் ஒரு குடும்பம் என்ற இந்திய தத்துவத்துக்கு இணங்க, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுதிப்பாட்டுக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பை அளிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்த அமைப்பு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக உருவெடுக்க வேண்டும்.

பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை விதிவிலக்கின்றி கையாள்வது, பிராந்தியப் பாதுகாப்பை அமைதி மற்றும் செழிப்புக்கான அடித்தளமாக மாற்றுவதற்கு அவசியமானது” என தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001ம் ஆண்டு சீனாவின் ஷாங்காயில் நிறுவப்பட்டது. இந்தியா, ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர்களாக உள்ளன. சுழற்சி முறையில் நாடுகள் இந்த அமைப்புக்கு தலைமை ஏற்கின்றன. கடந்த 2023ல் இந்தியா இந்த அமைப்புக்கு தலைமை வகித்தது.

“பயங்கரவாதத்துக்கு எதிராக ஷாங்காய் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” - ராஜ்நாத் சிங்
சுதந்திர நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை: ஈரான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in