லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி சரளா கத்தியார்.
சரளாவின் பேரன் அண்மையில் புதிதாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரை வாங்கினார். பாட்டி சரளா வீட்டுக்குப் புதிய காரில் பேரன் கடந்த வியாழக் கிழமை வந்தார். அப்போது காரை வீட்டில் பார்க்கிங் செய்வதற்காக பேரனுக்கு சரளா கத்தியார் உதவியுள்ளார்.
அப்போது அவரது பேரன் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சரளா மீது மோதியது. இதில் சரளா பலத்த காயமடைந்தார். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், கார் வருவதற்காக கதவை பாட்டி சரளா திறப்பதும், பின்னர் பார்க்கிங் செய்ய அவர் உதவியதும் தெரிகிறது.
அப்போது வீட்டுக்கு உள்ளே சென்ற கார் திடீரென பின்னால் வந்துள்ளது. அப்போது பாட்டி மீது கார் மோதி அவர் உடல் நசுங்குவது பதிவாகியுள்ளது. பாட்டி அலறல் சத்தம் பேரனுக்கு கேட்கவில்லை. காருக்கும், சுவருக்கும் இடையில் பாட்டி சரளா சிக்கினார். பலத்த காயமடைந்த அவரை, பேரன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக ஃபதேகர் போலீஸார் கூறும்போது, "இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த விதமான எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை. அப்படி வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்போம். காரிலிருந்த ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தாததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தனர்.