புதுடெல்லி / சென்னை: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்றே ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28 முதல் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மாதத்தின் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை வரவு வைக்க முடியாத சூழல் எழுந்திருக்கிறது. எனவே, இந்த மாதம் முன்கூட்டியே ஊதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதித் துறையின் தலைமைக் கணக்கு அதிகாரி அலுவலகம் (சிஜிஏ) நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘‘செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முன்கூட்டியே செப்டம்பர் 25-ம் தேதி ஊதியம் வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை: செப்டம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை, செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அரசு, தனியார் துறை வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ம் தேதி முதல் 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என்று மத்திய நிதித் துறை அறிவித்து உள்ளது. இந்நிலையில், வங்கி நிர்வாகங்கள் சார்பில் வாடிக்கையாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதில், “வங்கி ஊழியர் வேலைநிறுத்த நாட்களில் பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசு உத்தரவு: மத்திய அரசு போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை முன்கூட்டியே இன்று செப்டம்பர் 25-ம் தேதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மாதத்தின் கடைசி நாளில் வழங்கப்படுகிறது. ஒருவேளை கடைசி நாள் விடுமுறை நாளாக இருப்பின் அதற்கு முந்தைய நாளிலேயே ஊதியம் வழங்கப்பட்டு விடும். தற்போது வங்கி ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வழக்கம் போல் மாத கடைசி நாளில் (செப்டம்பர் 30-ம் தேதி) ஊதியம், ஓய்வூதியம் கிடைக்குமா என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசைப் போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாத சம்பளத்தை முன்கூட்டியே செப்டம்பர் 25-ம் தேதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து துறைகளின் செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரையிலான வார விடுமுறை நாட்கள் காரணமாக வங்கிகளின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை தலைவர்களும் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியப் பட்டியலைத் தயாரித்து ஊதியத்தைச் செப்டம்பர் 25-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட ஊதியம் வழங்கும் அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும். அதற்கேற்ப கருவூல கணக்கு இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து ஊதியக் கணக்கு அலுவலர்களுக்கு, கருவூல கணக்கு இயக்குநர் டி.சாரு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘வங்கி வேலை நிறுத்தத்தால் இம்மாதத்துக்கான அனைத்து மாதாந்திர ஊதியம், தினக்கூலி, ஓய்வூதியப் பட்டியல்களை வரும் 30-ம் தேதி என்றில்லாமல் முன்கூட்டியே 25-ம் தேதி அன்றே தயாரித்து அனைத்து ஊதியம், தினக்கூலி, ஓய்வூதிய பட்டியல்களுக்கான மின்னணு தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக அனைத்து பணம் வழங்கும் அலுவலர்களுக்கும் பட்டியல்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.