இந்தியா

தர்மேந்திர பிரதான் விலகல் கோரிக்கைக்கு பதிலளிக்க மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதாக சிஜேபி தகவல்

பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

மோகன் கணபதி

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பதில் அளிக்க நாளை வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளதாக மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், சிஜேபி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “எங்கள் இளம் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு திறந்த அழைப்பு. உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ - இவ்விரண்டில் நீங்கள் விரும்பும் இடத்தில் - பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த விவகாரத்தில் நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை.

பேச்சுவார்த்தையின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் நானும் உடனிருப்போம். படிப்படியாக பேச்சுவார்த்தை மூலம் நாம் தீர்வை நோக்கி முன்னேறுவோம். மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பேச்சுவார்த்தை இருக்கும். எனவே, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், “பேச்சவார்த்தையை பொது இடத்தில் நடத்த வேண்டும். ஒன்று, ஜந்தர் மந்தரில் நடத்தலாம். இல்லாவிட்டால், கான்ஸ்டியூஷன் கிளப்பில் நடத்தலாம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விட்டல் படேல் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய அரசு சார்பில், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரும், சிஜேபி சார்பில், சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோரும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆசுதோஷ் ரங்கா, “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது ஆகிய மூன்று கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம்.

இதில், கடைசி இரண்டு கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை குறித்து பதிலளிக்க நாளை (ஜூலை 25) மதியம் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது.

தர்மேந்திர பிரதானை நீக்குவதில் ஏற்படும் தாமதம், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும். அரசு விரைவில் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT