இந்தியா

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்

டெக்ஸ்டர்

புதுடெல்லி: இந்தியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. இதற்கான புதிய கட்டண விகிதங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. 

பாஸ்போர்ட் என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று மத்திய அரசு அண்மையில் தெளிவுபடுத்திய மறுநாளே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும், அதனைப் புதுப்பிப்பதற்கும் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டில் தான் பாஸ்போர்ட் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

36 பக்க சாதாரண பாஸ்போர்ட்: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் தற்போதைய ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

60 பக்க பாஸ்போர்ட்: கூடுதல் பக்கங்கள் கொண்ட 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான சாதாரண கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மைனர்களுக்கான கட்டணம்: 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் சாதாரண முறையில் ரூ.1,750 ஆகவும், தட்கல் முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெற இனி பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி, 36 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.5,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், 60 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்குச் சாதாரண முறையில் ரூ.6,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.8,500 கட்டணம் செலுத்த வேண்டும்.

இது தவிர, காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சரண்டர் சான்றிதழ் மற்றும் உலகளாவிய நுழைவுத் திட்ட சரிபார்ப்பு போன்ற இதர சேவைகளுக்கான கட்டணமும் இந்தியாவில் ரூ.500-லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான  கட்டணங்களும் இந்த புதிய விதிகளின் கீழ் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. 

ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய கட்டண அமைப்பே பொருந்தும் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT