புது டெல்லி: “பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகள் குறித்த விவரங்களை மத்திய அரசு எதிர்க்கட்சிகளிடம் பகிர வேண்டும்” என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துப் பேசிய சல்மான் குர்ஷித், "பிரிக்ஸ் மாநாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்; அது உலகிற்கும் நாட்டிற்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் முழு விவரங்கள் எப்போதும் வெளிப்படுத்தப்படுவதில்லை. சில சமயங்களில் விஷயங்கள் மேலோட்டமாகக் தெரிவிக்கப்படுகின்றன, அதன் முழுமையான விவரங்கள் தெரிவதில்லை.
உண்மையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதற்கு, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இது குறித்து அரசிடமிருந்து எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைப்பதில்லை.
இருதரப்பு சந்திப்பில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டனவா அல்லது அவை விவாதிக்கப்படாமல் இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பெறப்பட்ட பதில்கள் குறித்துத் தெரிவித்து, முழு விவரங்களையும் சரியான நேரத்தில் எதிர்க்கட்சிகளுடன் அரசு பகிர்ந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்.
நாடுகளுக்கு இடையிலான அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒரே சந்திப்பில் தீர்க்க முடியாது என்பது உண்மைதான். என்னென்ன விவகாரங்கள் எஞ்சியுள்ளன, எந்தெந்த அம்சங்களுக்கு மேலும் விவாதமும் தெளிவுபடுத்தலும் தேவை என்பதை தெரிவிக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.