இந்தியா

விமான கழிப்பறையில் மறைத்து ரூ.4.26 கோடி தங்கம் கடத்தல்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் (எஸ்விபிஐ) நேற்று முன்தினம் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-1478 என்ற விமானம் துபாயிலிருந்து வந்திறங்கியது.

அப்போது விமான நிலைய அதிகாரிகளுக்கு, இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்துவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகளின் உடமைகளில் சோதனை செய்தனர். ஆனால் தங்கம் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து விமான இன்ஜினீயர்கள் உதவியுடன் விமானத்தில் சோதனை செய்தபோது விமானத்தின் கழிப்பறையில் இருந்த ஸ்பீக்கருக்குள் ரூ.4.26 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவை 24 கேரட் எடையிலான 999.0 சுத்தமான தங்கக் கட்டிகளாகும். மொத்தம் 2.8 கிலோகிராம் எடையுடன் இருந்த அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கக் கட்டிகளை கடத்தியது யார் என்பது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT