சண்டிகர்: இண்டியா கூட்டணியின் டெல்லி பேரணியை கடுமையாக சாடியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மீண்டும் 5 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயராகுங்கள் என்று கிண்டல் செய்துள்ளார்.
சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, “பொய் சொல்வது, குழப்பத்தை உருவாக்குவது, எதிர்மறை கருத்தக்களைப் பரப்புவது, நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்குவது, நாடாளுமன்ற விவகாரங்களை வீதிகளுக்குக் கொண்டு வந்து கூச்சலிடுவது ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் இயல்பாக உள்ளது. இனியும் இதுதான் உங்கள் இயல்பாக இருக்கும் என்றால், மீண்டும் ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்க தயாராகுங்கள்.
கடந்த 15 ஆண்டுகளாக - மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் - ராகுல் காந்தி தோல்வியடைந்து வருகிறார். தனது மகன் பிரதமராக வேண்டும் என்ற சோனியா காந்தியின் கனவு நிறைவேறாமல் உள்ளது. இப்போது அவர்கள் ஒரு புதிய உத்தியை கையாண்டுள்ளனர். அதுதான், மாதிரி நாடாளுமன்றத்தை நடத்துவது.
ராகுல் காந்திக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் பிரதமராக விரும்பினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மாதிரி நாடாளுமன்றத்திலேயே பிரதமராக இருங்கள். ஏனென்றால், நிஜத்தில் உங்களுக்கு அந்த வாய்ப்பு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகவே நாடாளுமன்றத்தை முடக்கியவர் ராகுல் காந்தி. நான் அவருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவின் பெண் சக்திக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை நரேந்திர மோடி உறுதி செய்வார். இதுவே எங்கள் உறுதியான தீர்மானம்.
தீபாளியை நெருங்கிவிட்டதால், இப்போது போராட்டம் நடத்த வேண்டாம் என்று டெல்லி வணிகர்கள் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர். தங்களுக்கு வணிகம் சிறப்பாக நடக்கும் இந்த ஆண்டின் ஒரே வாரம் இதுதான் என்று அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இனிப்புகளையும், பட்டாசுகளையும் இப்போது விற்க முடியாவிட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை சிறு வணிகர்கள் எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
டெல்லியில் கடந்த மூன்று தேர்தல்களிலும் நீங்கள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாதபடி சிறு வணிர்கள் தடுத்துள்ளனர். அடுத்த மூன்று தேர்தல்களிலும் உங்களால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாது. சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை நிகழ்ந்த நாளான இன்று அவர்கள் டெல்லியில் பேரணி நடத்துகிறார்கள். அந்த துயரமான நாளில்தான் பேரணியை நடத்த வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
ஒருபுறம் நரேந்திர மோடி நாட்டை மிக வேகமான முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். சட்டப்பிரிவு 370 நீக்கம், நக்சலிசம் ஒழிப்பு, முத்தலாக் முறை ஒழிப்பு என பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனது வார்த்தைகளை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். 2029 டிசம்பர் 31ம் தேதிக்குள் பஞ்சாப் உட்பட ஒட்டுமொத்த நாடும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபடுவதை நாங்கள் உறுதி செய்வோம்.” என தெரிவித்தார்.