புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு நீண்ட நெடிய போராட்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் தனக்கென சில பக்கங்களை ஜென்ஸீ இளைஞர்களின் குரலால் நிரப்பிக் கொண்டிருக்கிறது பேரியக்கமாக உருமாறிக் கொண்டிருக்கும் ஒரு புதிய இயக்கம். அதன் ஆதரவாளர்கள் எழுப்பும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் நாடாளுமன்றத்தை பிளந்து கொண்டிருக்கிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி - CJP) தோன்றியது என்னவோ ஆன்லைனில் சில மாதங்களுக்கு முன்னர் தான். இந்த இயக்கத்தை ஆன்லைனில் தோற்றுவித்தவர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அபிஜித் தீப்கே என்ற இளைஞர். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது; ஆன்லைன் அரசியல் களத்துக்கு உதாவது’ என்ற விமர்சனங்களைத்தான் சிஜேபி ஆரம்பத்தில் எதிர்கொண்டது.
ஒரே ஒரு கருத்தும் ஓஹோ எதிர்வினையும்
கடந்த மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”கரப்பான்பூச்சிகளைப் போன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை; எந்தத் தொழிலும் செய்வதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி அனைவரையும் தாக்க தொடங்குகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அடுத்த சில நாட்களில் ஆன்லைனில் ஆரம்பிக்கப்பட்டதுதான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம். அந்த இயக்கத்துக்கு அமோக ஆதரவு ஆன்லைனில் கிட்டியது. வேலையில்லா இளைஞர்கள் பலரும் அங்கேயே களமாடி தங்களது இன்னல்களை, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை புட்டுபுட்டுவைத்து களமாடினர். அதனால், பாஜகவைவிட எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோயர்களை குவிக்கும் அளவுக்கு சிஜேபி அமோக ஆதரவைப் பெற்றது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் புள்ளிகளும் சிஜேபி-யை ஆன்லைனில் பின்தொடர ஆரம்பித்தனர். இந்த ஏகோபித்த ஆதரவால் அபிஜித் தனது இயக்கத்தை ஆன்லைனில் இருந்து அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்டார்.
ஜூன் 6 திருப்புமுனை...
அந்த வேளையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்த, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு போராட்டத்தை அறிவித்தார் தீப்கே.
ஜூன் 6-ம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவெடுத்து, அமெரிக்காவில் இருந்து அபிஜித் இந்தியா வந்தார். ஜூன் 6 போராட்டம் மாணவர்கள், இளைஞர்களின் பலத்த ஆதரவோடு நடந்தது. அன்று தொடங்கி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன.
அபிஜித் தீப்கே
இந்தப் போராட்டத்துக்கு லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவளித்தார். அதன் வெளிப்பாடாக ஜூன் 28-ம் தேதியன்று அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். ஆனால், 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்துவந்த அவர், ஜூலை 18 காலை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய மாணவர்கள் சங்கம் எஸ்எஃப்ஐ (Students Federation of India), அகில இந்திய மாணவர் சங்கம் (All India Students Association) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (All India Students Federation) ஆகியனவும் ஆதரவு தர, இப்போது போராட்டக் களம் அதீத பலம் பெற்றுள்ளது.
ஜூலை 20 ட்ரெய்லர்
இதற்கிடையில், ஜூலை 20 அன்று நடந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த போலீஸார் முயற்சித்தனர். அப்போது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சுகள் என்று பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், மேற்கு வங்கம் தொடங்கி தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை வரை சிஜேபிக்கு ஆதரவாக போராட்டங்கள் பரவத் தொடங்கியுள்ளன.
கூடவே, போராட்டத்துக்கு இப்போது அரசியல் கட்சிகள் பலவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. சிஜேபி இயக்கத்தினர், ஆதரவாளர்கள், மாணவர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவிவிட்டதாக காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, தர்மேந்திர பிரதான் மட்டுமல்ல பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. ஜூன் 6-ல் தொடங்கிய சிஜேபி போராட்டம் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையாக உருவாகியுள்ளது.
‘ஜூலை 20 பேரணி ஒரு ட்ரெய்லர்தான்’ என்று சிஜேபி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
என்னதான் வேண்டும் சிஜேபி-க்கு?
சிஜேபி இயக்கத்தின் இப்போதைய பிரதான கோஷம், கல்வித் துறையில் சீர்திருத்தம். நீட் தேர்வு ரத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அதனால் 20+ மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது ஆகியனவற்றை சுட்டிக்காட்டி தர்மேந்திர பிரதான் விலக வேண்டும். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசு கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சிஜேபி வலியுறுத்துகிறது.
இதற்காக, ‘எங்களுக்கு அரசியல் கட்சியினர் பெருமளவில் ஆதரவு தரலாம்... ஏன் பாஜகவினர் கூட ஆதரவு தரலாம்’ என்று சிஜேபி இயக்கம் கூறியுள்ளது.
இந்தச் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும் #AbolitionOfNEET என்பதே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் ஒழிப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எங்களது மூத்த தலைவர்களை நீங்கள் நசுக்க நினைத்தால் லட்சக்கணக்கானோர் திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் தொடர்ந்து போராடப் போகிறோம்” என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் சிஜேபி இயக்கத்தினர் மீதான வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிஜேபி உஷார்!
இந்தச் சூழ்நிலையில், நீட் எதிர்ப்பு, நீட் ரத்து என்ற கோரிக்கைகளோடு, வேலைவாய்ப்பின்மை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு மாநில, தேசிய கட்சிகள் சிஜேபி போராட்டத்தில் ஆதாயம் தேடலாம் என்று சிஜேபிக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
அதேவேளையில், சிஜேபிக்கு அதன் பிரதான இலக்கான தர்மேந்திர பிரதான் ராஜினாமா இன்னமும் நிறைவேறாவிட்டாலும் கூட, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் தங்கள் கோரிக்கை பற்றியும், தங்களைப் பற்றியும் பேசவைத்திருப்பதே அந்த இயக்கத்துக்கு இமாலய வெற்றி என்றும் கணிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது சிஜேபி நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு அழைப்புவிடுத்தபோது பிஹார், ஜெய்ப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஆதரவாளர்கள் டெல்லியில் குவிந்தனர். இந்தி பேசும் மாநிலங்களின் இதயம் என்றறியப்படும் பகுதிகளில் இருந்து ஆதரவு பெருகுவது பாஜகவுக்கு பலவீனம் என்றும் கூறுகின்றனர்.
தர்மேந்திர பிரதான் விலகல் என்பதற்காக மட்டுமல்லாது ஏன் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை சிஜேபி முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழும் சூழலில், “நேரடியாக கொள்கை எதிர்ப்பில் இறங்குவது சிஜேபி இயக்கத்தை ஏற்கெனவே உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒரு போட்டி இயக்கமாக முன்னிறுத்தும். கல்வி முறையில் சீர்திருத்தம் என்று இப்போது எடுத்துள்ள நிலைப்பாடு, அதற்கு சோனம் வாங்சுக் போன்ற நடுநிலையாளர்களின் ஆதரவு ஆகியன ஆரம்ப நிலையில் கட்சி சார்பு ஏற்பட்டுவிடாமல் சிஜேபி இயக்கத்தின் தன்மையைப் பாதுகாக்கும்” என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய சில சதி வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, சிஜேபி ‘அம்பேத்கரியத்தில் ஆழ்ந்துவிட்டது’, இனி பொதுப் பிரிவினர் இதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற சாயங்கள் பூசப்படுவதாக தகவல்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தரும் படிப்பினை!
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் தன்னெழுச்சியாக நடந்ததையும், அது ஒவ்வொரு இடமாக பரவியபோது அந்தந்தப் பகுதிக்கான முக்கியப் பிரச்சினைகளையும் சேர்த்துக் கொண்டு (உதாரணத்துக்கு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு) களமாட அரசு அதை முற்றிலுமாக முடக்கியதை நினைவுகூர்கிறார் சமூக ஊடகவியலாளர் ஒருவர்.
“சிஜேபி ஓர் இயக்கமாக சரியான பாதையில் செல்கிறது. எந்த அரசியல் கட்சியும் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்குத் தேவை நீதி என்ற மனநிலையில் உள்ள ஜென்ஸீ இளைஞர்கள்தான் அதன் உந்துசக்தி. 2029 தேர்தலில் நிச்சயம் ஜென்ஸீ இளைஞர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இலங்கை, நேபாள, வங்கதேச ஜென்ஸீ போராட்டங்கள் போன்றது அல்ல, இந்தியாவில் இப்போது நடைபெறும் போராட்டம். சிஜேபி இயக்கத்தின் நம்பகத்தன்மை, ஸ்திரத்தன்மை நீடிக்குமானால் அதற்கான ஜென்ஸீ ஆதரவும் மாறாது” என்கிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் ஒருவர்.
மேலும், “இளைஞர்கள் அரசியலற்ற மனப்பான்மையில் இருப்பது ஆபத்து. அந்த வகையில் தங்கள் பிரச்சினை சார்ந்து குரல் கொடுக்கும் சிஜேபியோ அல்லது வேறேதும் இயக்கத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது எதிர்காலத்தில் அரசியல் தெளிவை நோக்கி அவர்களை இட்டுச் செல்லும். அரசியலற்ற மனப்பான்மை கொண்ட ஜென்ஸீ மட்டுமல்ல, எந்தத் தலைமுறையினராக இருந்தாலும் அவர்கள் ரசிக மனப்பான்மைக்கு தங்களை இழப்பார்கள்” என்றும் எச்சரிக்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
2015-ல், குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 21 வயதான ஹர்திக் படேல் என்ற இளைஞர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி ஒரு நம்பிக்கை நட்சத்திரம் போல் பேசுபொருளாகி பின்னாளில் மங்கிப்போனார்.
டெல்லி ஜேஎன்யு முன்னாள் தலைவர் கன்னையா குமார், இடதுசாரியாக இருந்தவர். பல்வேறு போராட்டங்களில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர், பின்னாளில் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார்.
‘செத்த மாட்டை சுத்தம் செய்ய மாட்டோம். மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள்' என்று குஜராத்தின் உனாவில் லட்சக்கணக்கான தலித் மக்களை ஒன்று திரட்டியவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியவர். அவரும் பின்னாளில் காங்கிரஸில் இணைந்தார்.
சிஜேபி இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு இதுபோன்ற பல அரசியல் வாய்ப்புகள் வரலாம். ஆனால், முடிவு அவருடையதாக மட்டுமல்லாது, பெரும்பாலான இளைஞர்களின் பிரதிநிதியாக எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே ஜென்ஸீ-க்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.