மும்பை: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஜால்னா மாநகராட்சித் தேர்தலில், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர், 13-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஸ்ரீகாந்த் பங்கர்கர் 2001 முதல் 2006 வரை சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தவர். பின்னர் சீட் மறுக்கப்பட்டதால் இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற அமைப்பில் இணைந்தார். 2017-ம் ஆண்டு பெங்களூருவில் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2018-ல் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன.
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கர்கருக்கு எதிராக ஷிண்டே தலைமையிலான சிவசேனா எந்த வேட்பாளரையும் நிறுத்தாமல் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பிற கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி அவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பேசிய பங்கர்கர், தன் மீதான வழக்குகளுக்கும் தனது பொதுவாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.